

சேலம் திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவு அளித்து, திருநங்கையர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாடு முழுவதும் நேற்று (15-ம் தேதி) திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது. சேலத்தில் திருநங்கைகள் புத்தாடைகள் அணிந்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.
சேலம் திருநங்கைகள் நலச் சங்க தலைவி பூஜா, செயலாளர் கோபிகா, பொருளாளர் ரசிகா ஆகியோர் தலைமையில் திருநங்கைகள் நேற்று காலை சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கேக் வெட்டி திருநங்கையர் தினத்தை கொண்டாடியதோடு, ‘தூய்மை இந்தியா திட்டம்’ குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுத்தம் செய்தனர்.
கோரிக்கை மனு
பின்னர் திருநங்கைகள் சார்பில் அதிகாரிகளிடம் அளித்த மனு விவரம்:
மகளிர் தினம், அன்னையர் தினம் என கொண்டாடப்படுவது போல் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கைகள் தினத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மூன்றாம் பாலினம் என திருநங்கைகளை அங்கீகரித்து, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். திருநங்கைகள் சமூக நல வாரியம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்று இருந்தது.
மகிழ்வும், எதிர்பார்ப்பும்
இதுகுறித்து திருநங்கைகள் நலச் சங்க தலைவி பூஜா கூறும்போது, “தீபாவளி, பொங்கல் பண்டிகைபோல் திருநங்கைகள் தினத்தை நாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். கூவகம் திருவிழாவில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில், திருநங்கைகள் தின விழா கொண்டாடுவது சிறப்பு. மற்றவர்களை போல் நாங்கள் மகிழ்ச்சியாகவும், கவலை இல்லாமல் இருக்கவும் தமிழக அரசு சுயதொழில் தொடங்க கடன் உதவி வழங்க வேண்டும்.
திருநங்கைகள் தினத்தை ஆண்டுதோறும் வெகு விமர்சையாகவும், பிறருக்கு உதவும் வகையில் பொதுசேவையாக கொண்டாடி வருகிறோம். திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு கோரிமேட்டில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவளித்து, விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதில் திருப்தி அடைகிறோம். திருநங்கை யர் சமுதாயத்தில் எடுத்துக்காட்டாக இருப்பதை சுட்டிக்காட்ட தூய்மை இந்தியா திட்டப்பணியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு விழாவாகவும் கொண்டாடினோம்” என்றார்.