தமிழக முதல்வருடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு

தமிழக முதல்வருடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு
Updated on
1 min read

இஸ்ரேல் தூதர் டேனியல் கர்மான் தலைமையிலான குழுவினர், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர்.

அப்போது முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுக்கு ரூ.37,362 கோடி (6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. விரைவில் மேற்கொள்ளப்பட உள்ள வர்த்தக ஒப்பந்தம் மூலம், இருதரப்பு வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியடைய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் இந்திய–இஸ்ரேல் விவசாய சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தோட்டக்கலை இயந்திரவியல், பயிர் பாதுகாப்பு, நர்சரி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பால் உற்பத்திப் பிரிவிலும் கூட்டு முயற்சிகள் சிறப்பாக உள்ளன.

இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் பகுதியாக தமிழகம் உள்ளது. எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கட்டுமானத்துறை, நீர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இஸ்ரேலிய நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன.

தமிழகத்தில் ஏற்கெனவே ரூ.99,632 கோடி (16 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவுக்கு, தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரேல் தூதர் பேசும்போது, ‘‘தென் இந்தியாவில் நட்புறவை மேலும் வலுப்படுத்த இஸ்ரேல் விரும்புகிறது. குடிநீர் தயாரிப்பு துறையில் இரு நாட்டு கூட்டு முயற்சி மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. சுற்றுலாவுக்காக இந்தியா-இஸ்ரேல் இடையில் விமான போக்குவரத்தை அதிகரிப்பது அவசியம்’’ என்றார்.

பேச்சுவார்த்தை முடிவில், மே, 22,23-ம் தேதிகளில் சென்னையில் நடக்கும், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் இஸ்ரேல் பங்குபெற வேண்டும் என்பதை இஸ்ரேல் தூதரிடம், முதல்வர் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின்போது, வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in