அரசு விழாவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு: சென்னை பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு விழாவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு: சென்னை பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, துணைவேந்தர் ஆர்.தாண்டவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழா மேடையில் இருந்த பேனரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேனரில் ஜெயலலிதா படம் இடம்பெற்றிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் (இதழியல், அரசியல் அறிவியல், ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள்) சுமார் 20 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தில் அரசியல் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அது தொடர்பான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சென்ற துணைவேந்தர் தாண்டவன் பேச்சுவார்த்தை நடத்த தனது அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார். ஆனால், அவர்கள் அலுவலகத்துக்கு வர மறுக்கவே, அவர் திரும்பிச் சென்றுவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in