

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களின் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலந்துவிடப்படுவதால் ஏற்படும் ஆபத்தை தடுக்க தமிழக முதல்வர், பிரதமரை வலியுறுத்த வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
காவிரியின் குறுக்கே புதிய அணைகளை கட்டி தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் நோக்கோடு கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது காவிரி நீரில் கழிவுநீர் கர்நாடகத்தால் கலந்து விடப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
இத்தகவலை அம்மாநில சிறுபாசனத் துறை அமைச்சரே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பாசனத்துக்கு மட்டுமின்றி 20 மாவட்டங்களில் உள்ள சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி நீரே உள்ளது. இந்நிலையில் கர்நாடகம் ஒட்டுமொத்த கழிவு நீரையும் காவிரியில் கலந்து விடுவதால் பேராபத்து ஏற்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.
எனவே, தமிழக முதல்வர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, அவசரகால நடவடிக்கை எடுத்து மத்திய அரசின் நீர் வளத் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், மத்திய அரசு அவசரகால நடவடிக்கையாக அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து, கழிவு நீர் கலக்கும் இடங்களை ஆய்வு செய்து, தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக எல்லையில் வரும் காவிரி நீரின் தரம் குறித்து ஆய்வு செய்து, கழிவுநீர் கலந்த குடிநீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்திலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.