

மக்களவைத் தேர்தலில் செலவு செய்வதற்காக கப்பல்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் பணம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் 3 கப்பல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலில் பயன் படுத்துவதற்காக தூத்துக்குடி துறை முகத்துக்கு கப்பல்கள் மூலம் வெளி நாடுகளில் இருந்து பெருமளவில் பணம் வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம. ரவிக்குமாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி, வட்டாட்சியர் கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை மாலை துறைமுகம் சென்று அங்கு வந்த கப்பல்களில் சுங்கத்துறையினர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
மியான்மரில் இருந்து மரக் கட்டைகள் ஏற்றி வந்த ஸ்பிளென்டர், ஹாங்காங்கில் இருந்து பாமாயில் ஏற்றி வந்த திரேஸா அக்குவாரிஸ், சிங்கப்பூரில் இருந்து பர்னஸ் ஆயில் ஏற்றி வந்த பிரிக்ஸ்ஹாம் ஆகிய கப்பல்களில் வருவாய் துறையினர் மற்றும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். மாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை, நள்ளிரவு 11.45 மணி வரை நீடித்தது. இரவு 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் துறைமுகம் சென்று கப்பல்களில் சோதனை நடத்தினார். ஆனால், சோதனையில் பணமோ, பொருள்களோ கப்பல் களில் இருந்து கண்டுபிடிக்கப் படவில்லை.
மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் கூறுகையில், கப்பல்கள் மூலம் பணம் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்கத்துறையினர் உதவியுடன் வருவாய் துறையினர் மற்றும் போலீஸார் இரண்டு குழுக்களாக 3 கப்பல்களில் சோதனை நடத்தினர். இரவு 11.45 மணி வரை சோதனை நடந்தது. ஆனால், கப்பல்களில் பணமோ அல்லது வேறு எந்த பொருள்களோ இல்லை, என்றார்.