

காஞ்சிபுரம் மாவட்டம், நந்திவரம் பகுதியில் ஏரி மதகை விவசாயிகளே ஒன்றிணைந்து சீரமைத்து, அந்தத் தண்ணீரை சாகுபடிக்குப் பயன்படுத்தி 320 மூட்டைகள் நெல் அறுவடை செய்துள்ளனர். அதேவேளையில், ஏரி மதகை திறந்து மூடும் வகையில் நவீன ஷட்டர் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ் சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட நந்தி வரத்தில் 20 ஏக்கரில் தாங்கல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரித் தண்ணீர் மூலம் நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலத்தில் அப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, போக்குவரத்து வசதிக்காக கூடுவாஞ்சேரி பேரூ ராட்சி நிர்வாகம் தாங்கல் ஏரி மதகு களை இடித்து சிமென்ட் சாலை அமைத்தது. பின்னர், மதகை உரிய முறையில் மீண்டும் அமைத்துத் தரவில்லை. மாறாக, நிலத்துக்கு தண்ணீர் செல்ல வசதியாக சிமென்ட் குழாயை சாலையில் புதைத்து விட்டனர். இதனால், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி நிலத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, ஏரியில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து, ஏரி மதகை உரிய முறையில் சீரமைத்துத் தருமாறு பேரூராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பொதுப் பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் விவசாயிகள் வலியு றுத்தியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனத் தெரியவருகிறது.
ஏரி மற்றும் மதகு அமைந்துள்ள பகுதி எந்தத் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது என்ற குழப்பநிலை காரணமாகவே அரசு அலுவலர்கள் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இனி மற்றவர்களை நம்பி பலன் இல்லை என்ற முடிவுக்கு வந்த விவசாயிகள், தாங்களே ஒன்றிணைந்து ஏரி மதகை கடந்த ஆண்டு சீரமைத்தனர். இது குறித்து அப்போதே ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது. விவ சாயிகள் ஒன்றிணைந்து மதகை சீரமைத்ததன் பலனாக ஏரியில் தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டது. அந்த தண்ணீரைப் பயன்படுத்தி, கோயிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 16 ஏக்கரில் மட்டும் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது ஏக்கருக்கு சராசரியாக 20 மூட்டைகள் வீதம் 16 ஏக்கருக்கு மொத்தம் 320 மூட்டைகள் நெல் அறுவடை செய் துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது: சாலை வசதிக்காக உடைக் கப்பட்ட ஏரியின் மதகை மீண்டும் உரிய முறையில் சீரமைத்துத் தர வில்லை. இதனால், ஏரியிலி ருந்து தண்ணீர் வெளியேறி யதுடன், தேக்கிவைக்கவும் இயலவில்லை. இதையடுத்து, நந்திவரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து மதகை சொந்த செலவில் சீரமைத்தோம். அதன் பிறகு, ஏரியில் தேக்கிய நீரைப் பயன்படுத்தி நெல் சாகுபடியைத் தொடங்கினோம்.
தற்போது மொத்தம் 320-க்கும் மூட்டைகளுக்கும் அதிகமாக நெல் அறுவடை செய்துள்ளோம். ஏரி மதகை திறந்து மூட முடியாத நிலை உள்ளதால், மாவட்ட நிர்வாகம் நவீன ஷட்டர் அமைத்தத் தர வேண்டும் என்றனர்.