

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க வேண்டி, சேலம் கல்லூரிகளில் பயிலும் நேபாள மாணவர்கள் பிரார்த்தனை செய்து ரத்ததானம் செய்தனர்.
சேலத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் நேபாள நாட்டை சேர்ந்த மாணவர்கள், நேபாள மாணவர் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இச்சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கும், பலியானவர்களுக்கு பிரார்த்தனை செய்து, நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் 40 மாணவ, மாணவியர்கள் ரத்ததானம் செய்தனர்.
முன்னதாக, ரத்ததானம் வழங்க முன் வந்த மாணவர்கள், நேபாளத்தில் காயம் அடைந்து ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு தாங்கள் அளிக்கும் ரத்தத்தை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அரசு விதிமுறைப்படி தான் ரத்தம் அனுப்பி வைக்க முடியும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேபாள நாட்டு மக்களுக்கு ரத்தம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய அனுமதி கிடைக்கும் வரை 2,000 யூனிட் ரத்தம் சேகரிக்க முடிவு செய்துள்ளனர். இதன்படி, சேலம் ஹோலிகிராஸ் பள்ளி, செவ்வாய்ப் பேட்டை மசூதி உள்ளிட்ட இடங்களில் வரும் 5 நாட்கள் முகாம் நடத்தி ரத்தம் சேகரிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும், உடமைகளை இழந்த நேபாள மக்களுக்காக போர்வை, டார்ச்லைட், புத்தாடைகள், குடிநீர் கேன், நுகர்வு பொருட்கள் உள்ளிட்டவை சேகரிக் கின்றனர். நேபாள நாட்டு மக்களுக்கு உதவிட விரும்புவோர், ராஜாஜி சாலையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தை அணுகலாம். இதுதொடர்பாக மேலும் விபரம் அறிய 99940 66786 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.