1,226 கி.மீ. ஸ்கேட்டிங் சாதனை பயணம்: தூத்துக்குடியில் மாணவர்கள் தொடங்கினர்

1,226 கி.மீ. ஸ்கேட்டிங் சாதனை பயணம்: தூத்துக்குடியில் மாணவர்கள் தொடங்கினர்
Updated on
1 min read

தூத்துக்குடி - சென்னை - தூத்துக்குடி 1,226 கி.மீ. தொலைவுக்கு 48 மணி நேர தொடர் ஸ்கேட்டிங் சாதனை பயணத்தை மாணவ, மாணவியர் தூத்துக்குடியில் நேற்று தொடங்கினர்.

தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வை வலியுறுத்தியும், புதிய உலக சாதனை படைக்கவும் இந்த ஸ்கேட்டிங் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 5 வயது முதல் 16 வயது வரையுள்ள 29 மாணவர்கள், 3 மாணவியர் என மொத்தம் 32 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் மூன்று பிரிவாக பிரிந்து தொடர் பயணம் மேற்கொள்கின்றனர்.

8 பேரை கொண்ட முதல் குழுவினர் 8 கி.மீ. தொலைவுக்கும், 16 பேரை கொண்ட 2-வது குழுவினர் அடுத்த 5.75 கி.மீ. தொலைவுக்கும், 8 பேரை கொண்ட 3-வது குழுவினர் அடுத்த 3.75 கி.மீ. தொலைவுக்கும் ஸ்கேட்டிங் செய்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து குழுவினர் மாறி மாறி 1,226 கி.மீ. தொலைவுக்கு செல்கின்றனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன், சுங்கத்துறை இணை ஆணையர் உமாசங்கர் கவுடு, தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஸ்கேட்டிங் குழுவினர் அருப்புக்கோட்டை, மதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக வரும் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையை சென்றடைகின்றனர்.

அங்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவ, மாணவியரை வரவேற்று வழியனுப்பி வைக்கிறார். தொடர்ந்து அதே வழித்தடத்தில் தூத்துக்குடி நோக்கி ஸ்கேட்டிங் பயணம் தொடரும். அவர்கள் 28-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தை வந்தடைவார்கள். அங்கு, சாதனை மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in