

டப்பிங் கலைஞர்களுக்கான ஊதியத்தை பெற டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஜே.மதியழகன், ஆர்.மகாலஷ்மி, பி.ஆர்.கண்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
நாங்கள் தென்னிந்திய சினிமா, தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். இச்சங்கத்தில் 1,608 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். என்னைப் போன்ற கலைஞர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் வழங்கும் ஊதியம் இந்த சங்கத்தின் வங்கிக் கணக்கில் அளிக்கப்படுகிறது. பிறகு, அந்த ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு எங்களுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொலைக்காட்சி கலைஞர்களுக்கும் இத்தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. சங்கத்தின் துணை விதியின் படி இவ்வாறு ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாக சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், கலைஞர்களுக்கு தயாரிப்பாளர்கள் வழங்கும் ஊதியத்தை சங்கத்தின் கணக்கில் சேர்ப்பதற்கும், ஊதியத்தில் பத்து சதவீதம் பிடித்தம் செய்வதற்கும் எவ்வித விதியும் இல்லை என்பது தெரியவந்தது.
கலைஞர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக தயாரிப்பாளர்களிடமிருந்து சங்க நிர்வாகிகள் பெரும் தொகையை வசூலித்து விட்டு, கலைஞர்களுக்கு சொற்ப தொகையே வழங்குகின்றனர். மேலும், பிடித்தம் செய்யப்படும் பணத்துக்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை.
இப்பிரச்சினை குறித்து, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தோம். ஆனால், இதுவரை அவரிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. எனவே, டப்பிங் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பிடித்தம் செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, டப்பிங் கலைஞர்களுக்கான ஊதியத்தை டப்பிங் சங்கத்தினர் பெற இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இந்த மனுவுக்கு ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தொழிலாளர் நலத் துறைக்கும், தென்னிந்திய சினிமா, தொலைக்காட்சிக் கலைஞர்கள், டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.