Published : 05 May 2014 08:25 AM
Last Updated : 05 May 2014 08:25 AM

கத்தரி தொடங்கிய நாளில் தமிழகத்தில் பரவலாக மழை: 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்

கத்தரி வெயில் தொடங்கிய நாளில் தமிழகத்தில் பரவலாக, குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. வேலூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

தென் மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில், தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும் எனவும், வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்கியுள்ளது என்று தெரியாத அளவுக்கு, திருவாரூர் மாவட்டம் கொடவாசல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. அதே போன்று மதுரை மாவட்டம் பேரையூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் வத்றாப், தேனி மாவட்டம் பெரியார் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

மதுரையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை மாலை முதலே லேசான தூரல் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் முதல் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. இதே போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் கலவையில் மட்டும் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அது தவிர மற்ற இடங்களிலும், திருச்சியிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் புழுக்கமாக இருந்ததாக பொது மக்கள் கூறினர். கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவாகியிருந்தாலும், மற்ற இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், “தென் மேற்கு வங்கக் கடலில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருந்தது. அது, ஞாயிற்றுக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது தமிழக கடற்கரையை நோக்கி வருவதால், அடுத்த 48 மணி நேரத்தில், தென் மாவட்டங்களில் பரவலாக மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும்” என்றார். தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 100.04 டிகிரியும் குறைந்த பட்சமாக கொடைக்கானலில் 66.02 டிகிரியும் வெயில் பதிவானது. வேலூரில் 99.6 டிகிரி, சேலத்தில் 98.9 டிகிரி, திருச்சியில் 98.7 டிகிரியும் வெயில் பதிவானது.

எத்தனை நாளாச்சு: சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் கொட்டும் மழையில் சுகமாக நனைந்தபடியே செல்லும் வாகன ஓட்டிகள். படம்: எம்.வேதன்

கத்தரி வெயில்: ரமணன் கருத்து

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: கத்தரி வெயில் என்பது வானிலை ஆய்வுத் துறையின் வார்த்தை கிடையாது. அது பஞ்சாங்கத்தின் வார்த்தை. மேஷ ராசியில் சூரியன் நுழைவதை கத்தரி வெயில் என்பார்கள். வானிலை ஆய்வுத் துறை ராசியின் அடிப்படையில் இயங்குவதில்லை. மே மாதம் வெப்பம் அதிகரிக்கும்தான். இது வருடா வருடம் நிகழும் இயல்பான செயல். எனவே கத்தரி வெயில் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலை துறை கூறுவதில்லை என்றார்.

ஜோதிடர் சந்திரசேகர பாரதி இது குறித்து கூறுகையில், “ பஞ்சாங்கத்தின் கணிப்புகள்படி, கத்தரி வெயில் மே 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி முடியும். கத்தரி வெயில் 25 நாட்கள் இருக்கும். நெருப்பு கிரகமான சூரியன் பரணி நட்சத்திரத்தில் இருக்கும்போது கத்தரி வெயில் ஆரம்பிக்கும். சூரியன் மேஷ ராசியில் வரும்போதுதான் உச்சத்துக்கு போவார்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x