

கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர் கள் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, பிஎஸ்என்எல் இணைப்பகங்கள், அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னையில் அண்ணா சாலை, மாம்பலம், பூக்கடை உட்பட பல இடங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலகங்கள் முன்பு திரண்ட ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
2-வது நாளாக இன்றும்..
இந்த வேலைநிறுத்தத்தால் தொலைபேசி, செல்போன் கட்டணம் வசூலிப்பு, வாடிக்கை யாளர் குறைதீர்வு போன்ற பணி கள் பாதிக்கப்பட்டன. சென்னை யில் மட்டும் 250-க்கும் அதிகமான பிஎஸ்என்எல் அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஊழியர் கள் வேலைநிறுத்தம் 2-வது நாளாக இன்றும் நடக்கிறது.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தின் சென்னை மண்டல செயலாளர் கோவிந்தராஜ் கூறியதாவது:
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளிலேயே (நேற்று) போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. எங்கள் கோரிக்கையை ஏற்று முக்கிய அதிகாரிகளும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்கள் நலனுக்காக இல்லாமல், முழுக்க முழுக்க பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியால் திவாலாகும் நிலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.