

சென்னை தி.நகரில் முறையான தீயணைப்பு வசதிகள் இல்லாத வர்த்தக நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீ விபத்து
தி.நகருக்கு தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து போகிறார்கள். ஷாப்பிங்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இங்கு பல அடுக்குமாடி வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகள் உள்ளன. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு மக்கள் கூட்டம், வாகன நெரிசல், ஆக்கிரமிப்புகள் என எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. இது எல்லாவற்றிற்கும் மேலாக அடிக்கடி தீ விபத்துகள் நடப்பதும் தொடர்கதையாகி வரு கிறது. பல அடுக்குமாடி வர்த்தக நிறுவனங்களில் முறையான தீயணைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதுதான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த காலத்தில்
தி.நகரில் தீ விபத்துகள் ஏற்படு வது புதியது இல்லை. ஆண்டுக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒரு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் துரைசாமி சாலை அருகேயுள்ள பிரம்மாண்டமான ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. முக்கியமாக ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் அங்கு பணிபுரிந்த 2 பேர் பலியானார்கள். மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவுதான் இந்த விபத்துக்கு காரணமாக இருந்தது. தீயணைப்பு வசதிகள், அவசர கால வழிகள் போன்றவை இல்லாததுதான் இறப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தி.நகர் குடியி ருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த வி.எஸ்.ஜெயராமன் கூறியதாவது:
என்ன காரணம்?
தி.நகர் கடைகளில் தீ விபத்து ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மின்சார இணைப்புகள் தான். லேசாக ஏற்படும் மின்கசிவு பெரிய விபத்துகளில் கொண்டு போய்விடுகிறது. இவற்றை தடுக்க அந்த கடைகளில் முன்கூட்டியே தீயணைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அதை உறுதி செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு உரிமம் வழங்கக்கூடாது. ஆனாலும் தி.நகரில் நிறைய கடைகளில் தீயணைப்பு வசதி கிடையாது. தீ விபத்து ஏற்படும் போதுதான் அது வெளிச்சத்துக்கு வருகிறது. இதுமட்டுமன்றி ரங்கநாதன் தெருவிலுள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் போன்றவை உடனடியாக அந்த இடத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு நெரிசலும் ஆக்கிரமிப்புகளும் அதிகமாகவுள்ளன.
நடவடிக்கை இல்லை
முறையான தீயணைப்பு வசதி கள் இல்லாத கடைகள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துள் ளதா என்பதை அறிய தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தீயணைப்புத் துறையை கடந்த ஆண்டு நாடினோம். அதற்கு பதிலளித்த தீயணைப்புத்துறை, “நடவடிக்கை எடுக்கும் அதி காரம் எங்களுக்கு இல்லை. அந்த அதிகாரத்தை கொண்ட மாநக ராட்சி, சிஎம்டிஏவுக்கு தீத்தடுப்பு குறித்த பரிந்துரைகளை அனுப்பி யுள்ளோம்” என்று தெரிவித்தது.
மீண்டும் ஓராண்டு கழித்து , தீ விபத்தை தடுக்க மாநகராட்சியும், சிஎம்டிஏவும் ஏதாவது முயற்சி எடுத்தனவா என்று தீயணைப்புத் துறையிடம் தகவல் அறியும் சட்டத்தின் உதவியுடன் கேட்ட போது, “எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றே பதில் வந்தது என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி யின் மண்டல அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏற்கெனவே கட்டப்பட்ட வர்த்தக மையங்களில் அவசர படிக்கட்டுகள், போன் றவை இல்லாமல் இருப்பது உண்மைதான். ஆனாலும் அவற்றில் தீ விபத்தை தடுக்க வசதிகள் உள்ளனவா என்று அடிக்கடி சோதித்து வருகிறோம்.
மேலும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் தீயணைப்பு வசதிகள், விபத்து தடுப்பு அமைப்பு போன்றவை இல்லையென்றால் அவற்றிற்கு அனுமதி கொடுப்பதில்லை. சமீப காலமாகவே தி.நகரிலுள்ள தனியார் வர்த்தக நிறுவனங்களிடம் மாநகராட்சி கடுமையாகவே நடந்து வருகிறது” என்றார்.