

மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 34 கிராமங் களில் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை கோரி ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவற்றை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப் பித்த உத்தரவு: ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லவும், பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதற்கும் அனுமதி வழங்க முடியாது. நிபந்தனைகளின் பேரிலும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது.
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு மனு அனுப்பிய ஓரிரு நாளில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் அனுப்பிய மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் கையில் கிடைப்பதற்கு முன் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். இது தவறான நடைமுறை.
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை கேட்டுள்ள மனுதாரர் தன் மனுவில், போதையில் இருப்பவர்கள் பார்வையாளர்கள் மீது பாட்டில்களை வீசுவர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறியுள்ளார். இந்த கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி தாக்கலான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதி உத்தரவிட்டார்.