

வேளாண்மை பயிர்க் கடன்களுக்கான வட்டி மானியம் வரும் ஜூன் 30-ம் தேதி வரை மட்டுமே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், அதற்கு பிறகு இந்த வகை கடன்களுக்கான வட்டி மானியம் தொடருமா என்ற குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர்.
வேளாண்மைத் தொழிலை ஊக்கப் படுத்தும் வகையிலும், வேளாண்மைத் தொழிலை முழு அளவில் மேற்கொள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையிலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார், பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வந்தன.
இதன்படி, வழக்கமாக விவசாய பயிர்க் கடனுக்கு வசூலிக்கப்படும் 9 சதவீத வட்டியில் 2 சதவீதத்தை கழித்துக்கொண்டு 7 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதில் ஒரு விவசாயிக்கு நகைக் கடன் மற்றும் இதர கடன்கள் என அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கடன் தவணைக் காலமான ஓராண்டுக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிக்கு ஊக்கத்தொகையாக மேலும் 3 சதவீத வட்டியை கழித்துக்கொண்டு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஆண்டுதோறும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை கடன்களுக்கான மானியம் அறிவிக்கப்படும். இதனடிப்படையில் வேளாண்மைக் கடன்களுக்கான மானிய அளவை நிதித் துறையின் அறிவுரையைப் பெற்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தும். அதன்படியே, வட்டியை வங்கிகள் வசூலிக்கும். ஆனால், வேளாண்மைக் கடன்களுக்கான மானியத்தை நடப்பு நிதியாண்டுக்கு மத்திய அரசு அறிவிக்காததால், இந்த கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்தை ஏப்ரல் மாதம் முதல் வங்கிகள் நிறுத்தின.
இதனால், வேளாண்மைக் கடன்களுக்கான வட்டி 11 சதவீதமாக உயர்ந்தது. இதுகுறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில், கடன் வாங்க வங்கிகளுக்குச் சென்ற விவசாயிகளிடம், வட்டி மானியம் இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மத்திய அரசின் மறைமுகமான இந்த முடிவுக்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடிதம்
இதனிடையே, குறுகிய கால பயிர்களுக்கான கடன்களுக்கு 2014-15 நிதியாண்டில் வழங்கப்பட்ட வட்டி மானியத்தையே 2015-16 நிதியாண் டுக்கு வரும் ஜூன் 30-ம் தேதி வரை யில் வழங்கவும், அதன் பின்னர் மத்திய அரசு அளிக்கும் அறிவுரைக்கேற்ப செயல்படுமாறும் ஏப்ரல் 16-ம் தேதி ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் மாதவி சர்மா, வங்கிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வங்கிகள் 7 சதவீத வட்டியில் வேளாண்மைக் கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து தமாகா விவசாயப் பிரிவின் பொறுப்பாளர் புலியூர் நாகராஜன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “விவசாய பயிர்க் கடனுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி மானியத்தை தொடர்ந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய வளர்ச்சிக்கும், விவசாயிகளின் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, தொடர்ந்து விவசாய விரோதப் போக்குடன் செயல்படுவது கண்டனத்துக்குரியது” என்றார்.
இதுகுறித்து வங்கியாளர்கள் கூறும்போது, “வேளாண்மைக் கடனுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்தை 50 சதவீதத்துக்கும் மேலாக விவசாயிகள் அல்லாதோரே பயன்படுத்தி வருகின்றனர். இந்த மானியம் முறையாக விவசாயிகளை மட்டுமே சென்றடையும் வகையில் செயல்படுத்த விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பாக மத்திய அரசின் நிதியமைச்சகம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது” என்றனர்.