

திருவண்ணாமலை மாவட்டத்தில் கந்துவட்டிக் கொடுமையால் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பென்னாத்தூர் கிராமத்தில் வசித்தவர் சண்முகம் (35). இவர், கடந்த 21-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தந்தை பவுனு கொடுத்த புகாரின்பேரில் பாச்சல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன்பேரில் தலைமை காவலர் சின்னராசு, அதிமுக கவுன்சிலர் வெங்கடேசன் மற்றும் அவரது அடியாட்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியது உட்பட 4 பிரிவுகளில் 22-ம் தேதி இரவு 11 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் சின்னராசுக்கு, தி.மலை நகர காவல் நிலையத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. அவரும் பணியாற்றி உள்ளார். அதன்பிறகு அவர் தலைமறைவாகி விட்டார். ஒருவர் மீது வழக்கு என்றால், அவரைச் சுற்றி வளைத்து கைது செய்யும் காவல்துறை, தங்கள் வசம் இருந்த நபரை, பாதுகாப்புடன் வழியனுப்பி வைத்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கவுன்சிலரும் தப்புகிறார்
இந்த நிலையில் கூடுதல் எஸ்பி ரங்கராஜன் முன்னிலையில், திருவண்ணாமலை டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது, வெங்கடேசன் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை காண்பித்து, ‘இவர் உங்கள் மகனை தாக்கினாரா என்று கூறுங்கள்’ என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு பவுனு, இவர் இல்லை என்றும், தன் மகனை தாக்கியவரின் அடையாளங்களை குறிப்பிட்டுள்ளார். அது அவரது சகோதரர் செல்வத்தின் அடையாளத்துடன் ஒத்துபோனது. அவரது புகைப்படம் காண்பிக்கப்பட்டது. அதை பார்த்து, பவுனுவுடன் சென்றவர்கள் ‘ஆமாம்’ என்று கூறியுள்ளனர். இதையடுத்து, சின்னராசுவை வழியனுப்பி வைத்ததுபோல் திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசனை அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர்.
செல்போன் உரையாடல்
கடத்தப்பட்ட மகனை மீட்க, பவுனு உட்பட 3 பேர் சென்றபோது வெங்கடேசன் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் சண்முகத்தை கடத்தியது, அவரை தாக்கியது போன்ற செயல்களில் வெங்கடேசன் ஈடுபட்டிருக்கக்கூடும். அதற்கு காரணம், செல்போனில் சண்முகம் பதிவு செய்துள்ள மரண வாக்குமூலத்தில், ‘திருப்பதி பாலாஜி’ என்ற ரவுடி தன்னை கடத்திச் சென்று அசிங்கமாக திட்டி தாக்கியதாக பதிவு செய்துள்ளார். மேலும், சின்னராசு செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், செல்வம் மற்றும் வெங்கடேசனை தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
நீதி கிடைக்கவில்லை
காவல் துறை, கிராம முக்கிய பிரமுகர்கள் ஆகியோரது நெருக்கடி காரணமாக தங்களது போராட்டத்தில் இருந்து பவுனு பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக இருந்த சண்முகத்தின் உடலை பவுனு நேற்று பெற்றுக்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, “நீதி கிடைக்கும் என்று போராடினேன். நீதி வழங்க வேண்டியவர்களே ஏமாற்றுகின்றனர். எனக்கு நீதி கிடைக்கவில்லை” என்றார் வேதனையுடன். சண்முகம் தற்கொலை வழக்கில் 3 நாட்களாகியும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.