

உத்திரமேரூர் வட்டம் திருப்புலிவனம் கிராமத்தில் தலித் மக்களிட மிருந்து தலித் அல்லாதோருக்கு கைமாறிய பஞ்சமி நிலங்களை மீட்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஏப்ரல் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் ப.பாரதி அண்ணா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்திரமேரூர் வட்டம் திருப்புலிவனம் கிராமத்தில் 25 தலித் குடும்பங்களுக்கு 38 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பஞ்சமி நிலமாக கடந்த 1924-ல் அரசு வழங்கியது. இந்த இடம் தலித் மக்களுக்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
ஆனால் தற்போது அந்த பஞ்சமி நிலங்கள் தலித் அல்லாதோருக்கு கைமாறியுள்ளன. அதனால் திருப்புலிவனம் கிராமத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு, நிலமில்லாத தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்கிராமத்தில் ஏப்ரல் 8-ம் தேதி போராட்டம் நடத்த இருக்கிறோம்.
இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் பி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், ஐ.ஆறுமுகநயினார் மற்றும் நில உரிமை கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.நிக்கோலஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.