

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப் பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பேரவை கூடும் என தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை கடந்த 25-ம் தேதி கூடியது. அன்று 2015-16 நிதியாண்டுக்கான பட் ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்தக் கூட்டத் தொடர் 4 நாட்கள் நடந்தது. இதில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இடம் பெற்றது.
இறுதி நாளான நேற்று, விவாதத்துக்கு முதல்வர் பதில் அளித்து பேசினார்.
இதையடுத்து, பேரவையை தள்ளிவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் கொண்டு வந்தார். இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
அதைத்தொடர்ந்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேர வைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.
மீண்டும் எப்போது?
வழக்கமாக பட்ஜெட் மீதான பொது விவாதம் முடிந்ததும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும். தற்போது பட்ஜெட் விவாதத்துடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக 10 நாட்களுக்குப் பிறகு பேரவை மீண்டும் கூடலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.