

சவீதா பொறியியல் கல்லூரியில் “இன்ஜினீயரிங் ப்ராஜெக்ட் எக்ஸ்போ 15” என்ற பெயரில் மாணவர்களின் படைப்புகள் கண்காட்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியை சவீதா பல்கலைக்கழக வேந்தர் என்.எம்.வீரய்யன் தொடங்கிவைத்தார். சிம்சன் நிறுவன துணைத் தலைவர் வி.பாலசுப்பிரமணியன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். கண்காட்சியை பார்வையிட்ட அவர் மாணவர்களின் திறமைகளை பாராட்டினார். பள்ளி மாணவர்களும், பொது மக்களும் இக்கண்காட்சியை பார்ப்பதால் அவர்களும் பயன்பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை படிக்கும் மாணவர்களின் 250-க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.
ரோபாட்டிக்ஸ், நுண்ணுணர்வு கருவிகள், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி தொடர்பான சாதனங்கள், முப்பரிமாண பிரின்டிங் மற்றும் ஸ்கேனிங் கருவிகள், சூரிய சக்தியில் இயங்கும் கார்கள், பல்வேறு வாகன சேசிஸ்கள், மொபைல் அப்ளிகேஷன்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்தன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சார்பில் 2013-ம் ஆண்டில் “லூனாபோட்டிக் போட்டி” நடத்தப்பட்டது. அதில் இடம்பெற்ற ரோபோ அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ரோபோ கை, போரிடும் ரோபோ, பந்தய ரோபோ, கால்பந்து விளையாடும் ரோபோ ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் இயக்குநர் ரம்யா தீபக் பாராட்டி பேசினார். நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலவச வாகனங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்காட்சியை காண வந்திருந்தனர்.