Published : 22 Apr 2015 09:48 AM
Last Updated : 22 Apr 2015 09:48 AM

செயற்குழுவில் தொடர்ந்து பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை: காங்கிரஸ் தலைவர்களுக்கு எச்சரிக்கை

செயற்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், ஜெயக்குமார், குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி, நடிகை குஷ்பு, எம்.எல்.ஏக்கள் கோபிநாத், விஜயதரணி, பிரின்ஸ், மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்ட சுமார் 60 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னாள் மத்திய அமைச் சர்கள் ப. சிதம்பரம், தங்கபாலு, மணிசங்கர் அய்யர், பிரபு, அகில இந்தியச் செயலாளர் செல்லக்குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் பேசிய பலரும் 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது குறுக்கிட்ட இளங்கோவன், “செயற்குழு கூட்டம் இனி முறைப்படி நடத்தப்படும். தொடர்ந்து 3 முறைக்கு மேல் செயற்குழுவில் பங்கேற்காதவர்களை நீக்க கட்சி சட்டத்தில் இடம் உள்ளது” என்று எச்சரித்தார்.

கூட்டத்தில் பேசிய விஜயதரணி எம்.எல்.ஏ., கடந்த 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பேரணிக்கு குறிப்பிட்ட சிலர் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு இளங்கோவன், தான் யாரையும் அழைக்கவில்லை என்று பதிலளித்தார்.

முக்கியத் தலைவர்கள் செயற்குழுவைப் புறக்கணித்தது குறித்து இளங்கோவனிடம் கேட்டபோது, “ப. சிதம்பரத்துடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவரை டெல்லியில் சந்தித்துப் பேசினேன். கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கார்த்தி சிதம்பரம் கடிதம் அனுப்பி யுள்ளார்” என்றார்.

அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துவது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக எழுத்தாளர் ஜெயகாந்தன், தி.சு.கிள்ளிவளவன் ஆகியோர் மறைவுக்கும், திருப்பதி வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x