

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆந்திர அரசை கலைக்கக்கோரி புதுச்சேரியில் இன்று பந்த் நடந்தது. 5 இடங்களில் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் ஆந்திர மாநில காவல் துறையும், வனத்துறையும் சேர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்தது.
இத்தகைய கொடுமையை நிகழ்த்திய ஆந்திர மாநில அரசை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெரியார் திராவிடர் விடுதலை கழகம், தமிழ் தமிழர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சார்பில் இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி, புதிய நீதி கட்சி, நாம் தமிழர் கட்சி போன்றவை ஆதரவு தெரிவித்தன.
இதன்படி புதுச்சேரியில் முக்கிய வர்த்தக பகுதியான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, புஸ்சி வீதி, லாஸ்பேட்டை, புது பஸ் நிலையம், முதலியார்பேட்டை, கோரிமேடு, அரியாங்குப்பம், வில்லியனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பெரிய மார்க்கெட் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பில் கடைகளை திறக்குமாறு வற்புறுத்தினர். ஆனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. எஸ்பி ரவிக்குமார் தலைமையில் போலீஸார் நேரு வீதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். கடைகளை திறக்கலாம் என்று போலீஸார் கூறியுதால், ஒரு சில கடைகள் திறக்கப்பட்டன.
முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பேருந்துகள், ஆட்டோக்கள் அதிக அளவில் இயங்கவில்லை. திரையரங்குகள் செயல்படவில்லை.
புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தன.
5 இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு
அரியாங்குப்பம், வில்லியனூர் மங்கலம், கோட்டக்குப்பம், கிழக்கு கடற்கரைச்சாலை உள்பட 5 இடங்களில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டன.யாருக்கும் காயமில்லை.
முழு அடைப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த புதுவை பெரியார் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் கோகுல்காந்தி நாத், பூரான்கள் இயக்கம் போன்ஸ் ரமேஷ், அலைகள் இயக்க அமைப்பாளர் வீர.பாரதி, தமிழ் தமிழர் இயக்கம் மகேஷ் உள்பட முன்னெச்சரிக்கையாக செவ்வாய்க்கிழமை இரவே கைது செய்யப்பட்டனர்.
புது பேருந்து நிலையத்தில் சாலை மறியல் செய்த நாம் தமிழர் கட்சியினர் உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.