Last Updated : 18 May, 2014 12:00 PM

Published : 18 May 2014 12:00 PM
Last Updated : 18 May 2014 12:00 PM

`ஆக்கர்’ வாங்கிய பம்பரம்! - அதீத தன்னம்பிக்கையால் வீழ்ந்த வைகோ

பா.ஜ.க. ஆட்சியில் பங்கெடுப்பவர் என்று ‘எதிர்பார்க்கப்பட்ட’வைகோ, தன் அதீத தன்னம்பிக்கையால் வீழ்ந்திருக்கிறார். அவரது ‘பம்பரம்’போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் ‘ஆக்கர்’ வாங்கி சேதப்பட்டிருக்கிறது.

வைகோவின் இந்தச் சறுக்கலுக்கு என்ன காரணம்? விருதுநகரைத் தேர்ந்தெடுத்ததுதான் அவர் செய்த முதல் தவறு. கடந்த தேர்தலில் மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்டும், புதிய இளைஞர் ஒருவரிடம் அவர் தோற்றுப்போன தொகுதி இது. தற்போது அவர் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கும் இங்கே ஓட்டு வங்கி கிடையாது. இருந்தும் தன்னை வீழ்த்திய மக்களிடமே “இந்த முறை நான் ஜெயித்துக் காட்டுகிறேன் பார்” என்று அவர் காட்டிய அதீத தன்னம்பிக்கையே வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது.

பாஜகவுக்கு மனஉளைச்சல்

பா.ஜ.க. கூட்டணியில் ஏற்கெனவே இருந்தவர்தான் என்றாலும், இந்த முறை மோடியை தன் தலைமேல் வைத்து அவர் கொண்டாடியவிதம் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையோ பா.ஜ.க.வுக்கே மனஉளைச்சலைத் தந்தது. ’யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’ என்று நாட்டின் பெயரை மாற்றுவோம் என்பது தொடங்கி, இலங்கை பிரச்னை வரை வைகோவின் தேர்தல் அறிக்கையில் வெளிப்பட்ட வாக்குறுதிகளைக் கண்டு பாஜக அதிர்ச்சி அடைந்தது.

அவை எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராதவை என்று மக்கள் பேசத் தொடங்கினர். மத்திய தேருக்கு முட்டுக்கட்டையாகக் கருதி மோடி அனுதாபிகள்கூட, 7 தொகுதியிலும் பம்பரத்தைத் தவிர்த்துவிட்டனர்.

ஓட்டுக்கு வழிசெய்யவில்லை

தி.மு.க. உள்கட்சி பிரச்சினையில் எத்தனையோ பேர் தலையிட்டாலும்கூட, மு.க.அழகிரியை வீடு தேடிச் சென்று வைகோ பார்த்ததை அவரது கட்சியினராலேயே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இந்தச் சந்திப்பு ம.தி.மு.க.வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற வேகத்தை தி.மு.க.வினருக்கு ஏற்படுத்தியதே தவிர, ஓட்டுக்கு வழிசெய்யவில்லை.

வாக்குப் பதிவுக்கு 2 நாள்களுக்கு முன்பு, திமுக வேட்பாளர் இலங்கை சென்று ராஜபக்சேவுடன் விருந்துண்டதாக ஒரு தகவலைத் தந்து மாட்டிக்கொண்டார். இதேபோல, என்னைத் தோற்கடிப்பதற்காக கேரளத்தில் இருந்து பணம் வந்திருக்கிறது, ராஜபக்சே கும்பலிடம் இருந்தும், ஸ்டெர்லைட் நிர்வாகத்தில் இருந்தும் பணம் வந்திருக்கிறது என்றும் வைகோ சொன்னதும் எடுபடவில்லை.

“மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், மத்தியில் வைகோவுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும்” என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் வாக்குறுதி கொடுத்ததும், கேபினட் அமைச்சர்போல நடந்து கொண்டார் வைகோ.

கடந்த 6-ம் தேதி மதுரையில் ம.தி.மு.க. 21-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதில் பேசிய வைகோ, “இனிமேல் காதுகுத்து, கல்யாணம் என்று சின்னச்சின்ன நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் என்னை அழைக்காதீர்கள். உள்ளூரில் பெரிய தலைவர்கள் இருக்காங்க. அவங்களை அழைத்துக்கொள்ளுங்கள். இனி என் நேரத்தை வீணாக்காதீர்கள்” என்றார்

வாக்கு எண்ணிக்கையில், கடந்த தேர்தலைவிட 30,278 வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறார் வைகோ. இத்தனைக்கும் மொத்த வாக்காளர் எண்ணிக்கையோ, கடந்த தேர்தலைக்காட்டிலும் 3 லட்சம் அதிகம்.

மதிமுக.வின் வாக்கு வெறும் 3.6 சதவீதம்தான் என்ற உண்மை இப்போது வெளியாகியிருக்கிறது. இதில், பாஜக, தேமுதிக.வின் பங்கையும் கழித்துவிட்டால் மிச்சம் என்ன இருக்கும் என்பதை வைகோ புரிந்து நடக்க வேண்டிய காலகட்டம் இது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x