Published : 29 Apr 2015 05:33 PM
Last Updated : 29 Apr 2015 05:33 PM

உதகை மசினகுடி தனியார் விடுதியில் அனுமதி இல்லாமல் செயல்படும் குழந்தைகள் காப்பகம்

உதகை அருகே மசினகுடி தனியார் விடுதியில் அனுமதி இல்லாமல் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகங்கள் செயல்படுகின்றன. சமீப காலமாக காப்பக நிர்வாகிகள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு கடத்துவது, அவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பது உள்ளிட்ட புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் சமூக நலத்துறை மூலமாக, குழந்தைகள் காப்பகங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள சில குழந்தைகள் காப்பகங்கள் அனுமதி இல்லாமல் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மசினகுடி பகுதியில் அனுமதி இல்லாத காப்பகம், தற்போது தங்கும் விடுதியில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கட்டிடம் இல்லாத காப்பகம்

காப்பகம் நடத்த சொந்தக் கட்டிடம் இருக்க வேண்டிய நிலையில், இந்தக் காப்பகம் அரசு நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடத்துக்கு எந்தவித ஆவணங்களும் இல்லாததால், காப்பகத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த காப்பக குழந்தைகளுக்கு ஊழியர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.

இதன் பின்னர் செயல்படாமல் இருந்த காப்பகம், தற்போது தனியார் விடுதியில் செயல்பட்டு வருகிறது. இதில் தங்கியுள்ள 80 குழந்தைகள், அருகே உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். தங்கும் விடுதியில் அனுமதி இல்லாமல் காப்பகம் செயல்படுகிறது, காப்பகம் மூடப்பட்டால் இதில் தங்கியுள்ள குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இந்நிலையில், காப்பக நிர்வாகிகள் சமூக நலத்துறையிடம் அனுமதிக்கு விண்ணப்பிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தேவகுமாரி கூறியதாவது:

நீலகிரி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ், 14 குழந்தை காப்பகங்கள் செயல்படுகின்றன. மசினகுடியில் செயல்பட்டுவரும் காப்பகத்தின் மீது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார்கள் வந்தன. இதனால், தொடர்ந்து அந்த காப்பகத்தை ஆய்வு செய்து வருகிறோம்.

அரசு நிலத்தில் செயல்பட்டு வந்த காப்பகம், தற்போது தனியார் தங்கும் விடுதியில் செயல்படுகிறது. வருவாய்த் துறையினர் மற்றும் நாங்களும் விசாரித்து வருகிறோம். வருவாய்த் துறையினர் விசாரித்து சான்றளித்த பின்னரே, அவர்கள் சமூக நலத்துறையிடம் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், காப்பக நிர்வாகிகள் இதுவரை அனுமதிக்கு விண்ணப் பிக்கவில்லை. காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளின் படிப்பு உட்பட பிற நலன்களையும் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x