

ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பி.டில்லிபாபு கூறியுள்ளார்.
ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் சார்பாக சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பி.டில்லிபாபு பேசியதாவது:
துப்பாக்கிச்சூட்டில் இறந்த 20 தமிழர்கள் ஆந்திர போலீஸாரால் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிதியுதவியை ரூ.25 லட்சமாக உயர்த்தவேண்டும். அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
3 ஆயிரம் தமிழர்கள்
மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் சண்முகம் பேசும்போது, “ஆந்திர மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 3 ஆயிரம் தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேறு பகுதிகளுக்கு வேலைக் காக செல்லும் மலைவாழ் மக்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.