Published : 07 Apr 2015 11:03 AM
Last Updated : 07 Apr 2015 11:03 AM

சான்றிதழை வாங்கச் சென்ற ஆசிரியை மீது பள்ளி நிர்வாகி ஆசிட் வீசியதாக கணவர் புகார்

கல்விச் சான்றிதழை கேட்கச் சென்ற ஆசிரியை மீது தனியார் பள்ளி நிர்வாகி ஆசிட் வீசியதாக ஆசிரியையின் கணவர் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்திருநகரில் சியோன் கிட்ஸ் பார்க் மழலையர் பள்ளி உள்ளது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றன. கே.கே.நகர் முனுசாமி சாலையை சேர்ந்த மஞ்சு சிங் (31) என்பவர் இங்கு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்து நின்றுவிட்டார்.

பணியில் சேர்ந்தபோது சமர்ப் பித்த கல்விச் சான்றிதழை திருப்பித் தருமாறு பள்ளி நிர்வாகி புளோராவிடம் மஞ்சு கேட்டதாகவும், அவர் இழுத்தடித்ததாகவும் கூறப் படுகிறது. இந்நிலையில், சான்றி தழை கேட்கச் சென்ற மஞ்சு மீது ஆசிட் வீசப்பட்டதாக அவரது கணவர் ஜி.எம்.பஷீர் அகமது பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

மழலையர் பள்ளியில் ஒன்றரை ஆண்டு காலம் ஆசிரியையாகப் பணியாற்றிய என் மனைவி மஞ்சு, சில காரணங்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலையில் இருந்து நின்றுவிட்டார். அவர் லண்டனில் படித்து பெற்ற பிபிஏ சான்றிதழை பணியில் சேரும்போது கொடுத்திருந்தோம். அதை திருப்பித் தருமாறு பள்ளி நிர்வாகி புளோராவிடம் கேட்டோம். அவர் அதை தராமல் 4 மாதங்களாக இழுத்தடித்தார்.

இந்த சூழ்நிலையில், வீட்டுக்கு வந்து சான்றிதழை வாங்கிக்கொள்ளுமாறு புளோரா தகவல் தெரிவித்தார். அதன்படி நானும் மஞ்சுவும் ஆற்காடு சாலையில் உள்ள புளோராவின் வீட்டுக்கு சென்றோம். நான் வெளியே காரில் காத்திருந்தேன். மஞ்சு மட்டும் உள்ளே சென்றார். அவரை புளோராவும் வீட்டில் இருந்தவர்களும் கடுமையாக தாக்கியதுடன் மஞ்சுவின் முதுகில் ஆசிட் போன்ற ஏதோ ஒரு ரசாயனத்தை வீசியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பஷீர் கூறினார்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸிலும் அவர் நேற்று புகார் கொடுத்தார்.

ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்ளலாமா?

பொதுவாக, பணியில் சேரும் ஆசிரியர்களின் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களையும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் வாங்கி தங்கள்வசம் வைத்துக்கொள்கின்றன. இதுபற்றி கேட்டபோது, மெட்ரிகுலேஷன் கல்வி இயக்கக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பணியில் சேரும்போது அசல் சான்றிதழ்களை ஆய்வுசெய்துவிட்டு சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெறப்பட்ட நகல்களை வைத்துக்கொள்ளலாம். மற்றபடி, ஆசிரியர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு அதிகாரம் இல்லை.

இதுபோல, அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொள்ளும் பள்ளி நிர்வாகங்கள் பற்றி மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி போன்ற அதிகாரிகளிடம் புகார் செய்தால் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x