Published : 21 May 2014 09:49 AM
Last Updated : 21 May 2014 09:49 AM

அதிமுக-வுடன் இணைந்து பணியாற்ற தயக்கமில்லை: அன்புமணி

“தமிழக பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதில், அதிமுக-வுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறேன். அவரது அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து குடியரசுத் தலைவரிடம் பாமக சார்பில் கடிதம் அளித்துள்ளோம். தமிழகத்தில் எங்கள் கூட்டணி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதே சமயம் திமுக - அதிமுக ஆதரவின்றி, இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருப்பது வரலாறாகும். இதைப் போன்ற வெற்றிகள் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்.

பதவி தந்தால் ஆலோசிப்போம்

பணபலம், அதிகார பலம், தேர்தல் ஆணைய ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதித்துவம் தேவை. எங்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக எந்த உறுதியும் தரப்படவில்லை. பதவி தர முன்வந்தால், எங்கள் கட்சி அதுபற்றி முடிவெடுக்கும்.

இலங்கைத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை, நதிநீர் விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பேன். அதிமுக சார்பில் 37 பேர் உள்ளனர். தமிழக பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக-வுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இவ்வாறு அன்புமணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x