ஜெயகாந்தனுக்கு கண்ணீர் அஞ்சலி

ஜெயகாந்தனுக்கு கண்ணீர் அஞ்சலி
Updated on
2 min read

மறைந்த ஜெயகாந்தனின் உட லுக்கு அரசியல் கட்சித் தலைவர் கள், திரைத் துறையினர் மற்றும் பல்வேறு துறையினர் நேற்று அஞ் சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் மின் மயா னத்தில் நேற்று மாலை நடந்தது.

தமிழ் இலக்கிய உலகின் பிதா மகனாக விளங்கிய ஜெயகாந்தன் (81) நேற்று முன்தினம் இரவு காலமானார். ஜெயகாந்தனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நேற்று கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கலைத்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந் தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மதியம் ஜெயகாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் கனிமொழி எம்.பி., முன் னாள் மத்திய அமைச்சர் ராசா, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரும் வந்திருந்தனர். முன்ன தாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஜெயகாந்தனின் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், பாஜக மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன், நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், நாசர், விவேக் திரைப்படத் தயாரிப்பாளர் முக்தா வி.சீனிவாசன், எடிட்டர் லெனின், இயக்குநர்கள் பாரதி ராஜா, வசந்த், லிங்குசாமி, சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் பால குமாரன், சா.கந்தசாமி, கவிஞர்கள் அப்துல் ரகுமான், வைரமுத்து உட்பட பலரும் ஜெயகாந்தனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து நேற்று மதியம் அவரது உடல் பெசன்ட்நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டு தகனம் செய்யப்பட்டது. அவரது மகன் ஜெயசிம்மன் இறுதிச் சடங்குகளை செய்தார்.

எழுத்தாளர் ஜெய காந்தனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு என்று தலைவர்களும், கலைஞர்களும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

தா.பாண்டியன் (இந்திய கம்யூ. முன்னாள் மாநில செயலாளர்):

ஜெயகாந்தன் தமிழ் எழுத்துலகின் முடிசூடா மன்னனாக இருந்தவர். எங்களுடன் நீண்டகாலம் இருந்தவர். அவருடைய மறைவு எங்களுக்கு மட்டுமின்றி இலக்கிய உலகுக்கே பேரிழப்பாகும்.

ஜி.கே. வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்:

தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பெற்ற முதுபெரும் எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் அவர்களின் மறைவு தமிழுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. புகழ்பெற்ற சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை நூல்கள் படைத்த பெருமை அவருக்கு உண்டு. இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற பெருமைக்குரியவர். பெருந்தலைவர் காமராஜரின் தீவிர தொண்டர். மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களின் அன்புக்கும், பாராட்டுக்கும் உரியவராகத் திகழ்ந்தவர்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்):

ஜெயகாந்தனின் மறைவு தமிழ் சமூகத்துக்கும், இந்திய எழுத் துலகுக்கும் பெரிய இழப்பாகும். இந்திய அரசு அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட வேண்டும். மாநில அரசு அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்.

கமலஹாசன் (நடிகர்):

தமிழில் ஒரு எழுத்து குறைந்ததுபோல் இருக்கிறது. அவரின் எழுத்துகளை யும், கருத்துக்களையும் எல்லோரும் படிக்க வேண்டும். அதை படித்து விட்டு, முடிந்தால் எழுதுங்கள்.

பாலகுமாரன் (எழுத்தாளர்):

ஜெயகாந்தன் இல்லையென்றால் எங்களைப் போன்றோர் வெகுஜன பத்திரிகைகளுக்கு வந்திருக்க முடியாது. நல்ல இலக்கியங்களை மக்களிடம் எழுத்து மூலம் எடுத்துக் சென்றவர் அவர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா:

ஜெயகாந்தன் என்ற இலக்கிய சிங்கத்தின் கர்ஜனை பிரபஞ்சம் இருக்கும் வரையில் இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் சிவக்குமார்:

ஒரு கம்பர், ஒரு பாரதி, ஒரு ஜெயகாந்தன்தான். காட்டில் ஒரு சிங்கம் தான். அது ஜெயகாந்தன்தான். நடிப்பில் சிவாஜியுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அதுபோல், எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் யாரையும் ஒப்பிட முடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in