

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் பொ.கார்குழலி தெரிவித்தார்.
சென்னை செங்குன்றத்தில் வசித்து வந்தவர் ஸ்ரீதர் (25). டிப்ளமோ படித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் தொழில் நுட்பநராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்டு, கடந்த 9-ம் தேதி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் குழு வினர் பரிசோதனை செய்து பார்த் ததில், அவருடைய மூளையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஸ்ரீதர் மூளைச்சாவு அடைந்தார். மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து ஸ்ரீதரின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் கண்களை எடுத்தனர்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த ஆண் நோயாளி ஒருவருக்கு ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. டாக்டர்கள் பிச்சைபாலசண்முகம், எட்வின் ஃபெர்னாண்டோ, குமுதா லிங்கராஜ், மீனாட்சி ஆகியோர் கொண்ட குழுவினர் சிறுநீரகத்தை வெற்றிகரமாக பொருத்தினர். மற்றொரு சிறுநீரகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்தப் பட்டது. இதயம், கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி களுக்கு பொருத்தப்பட்டது. 2 கண் களும் எழும்பூர் அரசு கண் மருத் துவமனைக்கு கொடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை டீன் பொ.கார் குழலி கூறும்போது, ‘‘மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இந்த மருத்துவமனையில் இதுவரை 681 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 91 சிறுநீரகங்கள், மூளைச்சாவு அடைந்த நபர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது’’ என்றார்.