

முசரவாக்கம் கிராம அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள், வகுப்பறைகளுக்கு தேவையான உபகரணங்களை கிராம மக்கள் சீர்வரிசையாக வழங்கினர். பள்ளி ஆண்டு விழாவுக்கு ஆகும் செலவை பயனுள்ளதாக மாற்றும் முயற்சியாக இந்த ஊர்கூடி சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த முசர வாக்கம் கிராமப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். ஆண்டுதோறும் இப்பள்ளியில் ஆண்டுவிழா நடத்து வது வழக்கம். இந்நிலையில் அதற்கு பதிலாக, பிள்ளைகளின் கல்விக்கு தேவையான அடிப் படை பொருட்கள் மற்றும் வகுப் பறை பயன்பாட்டுக்கு தேவை யான பொருட்களை பொற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என பள்ளி ஆசிரியர்கள் கருதினர். இதுகுறித்து அண் மையில் கிராம மக்களுக்கு பள்ளி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான அடிப்படை பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள், புத்தகங்கள் போன்ற 25 விதமான பொருட்களை தட்டுகளில் வைத்து பள்ளிக்கு அருகில் உள்ள கோயிலில் இருந்து, சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் பள்ளியை அடைந்ததும் அங்கிருந்த மாணவ, மாணவிகளிடம் சீர் வரிசை பொருட்களை வழங்கினர். இதை தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரவி, வட்டார வள மைய மேற்பார்வை யாளர் பழனி, வசந்தி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் கமலகண்ணன் கூறியதாவது: பள்ளியின் இறுதி ஆண்டு காலங்களில் பிரம்மாண்ட மான ஆண்டு விழா நடத்துவதை, அனைத்து பள்ளிகளும் வழக்கமாக வைத்துள்ளன.
இதனால், ஆடம்பர செலவுகள் செய்யப்படுகிறதே தவிர, மாணவர்களுக்கு பயன் ஏதும் இல்லை. எனினும், மற்ற வர்கள் நிகழ்ச்சி நடத்துவதை நாங்கள் குறை கூறவில்லை. எங்கள் பள்ளியில், ஆடம்பரமான முறையில் ஆண்டு விழா நடத்துவதைவிட, பிள்ளைகள் மற்றும் பள்ளிக்கு தேவையான பொருட்களை சேகரிக்க விரும்பி னோம். இதுதொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்தோம். அவர்களும் இதை வரவேற்று, அவர்களால் முடிந்த பொருட்களை சீர்வரிசை என்ற பெயரில் வழங்கினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முசரவாக்கம் கிராமத்தில் பள்ளி மற்றும் மாணவர்களின் படிப்பு உபகரணங்களை சீர்வரிசையாக் கொண்டு சென்ற கிராம மக்கள்.