Last Updated : 10 Mar, 2014 12:00 AM

 

Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM

திமுகவுடன் கூட்டணி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று முடிவு: 17 மாநிலங்களில் போட்டியிடும் 42 வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுகவுடனான கூட்டணி குறித்து சென்னையில் திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அதன் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக மற்றும் தேசிய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடந்தது. மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் அசீஸ்பாஷாவின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்த மாத இறுதியில் தேர்தல் அறிக்கையை வெளியிட முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி முறிந்த நிலையில் திமுகவுடன் கூட்டணி சேரும் முயற்சி நடப்பதால் கட்சியின் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. கூட்டணி தொடர்பான இறுதி முடிவை தமிழகத்தில் திங்கள்கிழமை கூடும் மாநில நிர்வாகக் குழுவுடன் கலந்து ஆலோசித்து எடுக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

டி. ராஜா பேட்டி

இது குறித்து கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தி இந்துவிடம் கூறியபோது, ‘மாநிலங்களில் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது குறித்து விரிவான விவாதம் நடந்தது. இதன் முதல் பட்டியலாக 17 மாநிலங்களில் சுமார் 42 வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை முறிந்து போன நிலையில் என்ன செய்வது என்றும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இங்கு எடுக்கும் எந்த முடிவானாலும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து எடுப்பது என இருகட்சியின் மாநில தலைவர்களும் ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி இறுதி முடிவு எடுக்க நாளை மாநில நிர்வாகக்குழு சென்னையில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டியும் நானும் செல்ல இருக்கிறோம். இதற்கிடையில் திமுகவிடம் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இன்னும் நடைபெறவில்லை.’ எனத் தெரிவித்தார்.

சுதாகர் ரெட்டி விளக்கம்

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து கூறுகையில், ‘மாற்று அணியில் (3-வது அணியில்) உள்ளவர்கள் எங்களுடன் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உதாரணமாக, எங்கள் அணி உறுப்பினரான முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹாரில் எங்களுடன் கூட்டு சேரவில்லை” எனப் பதிலளித்தார்.

இதன்மூலம், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், அதிமுகவின் கூட்டணி இல்லை என்றாலும், ஜெயலலிதா தேர்தலுக்கு பிறகு மாற்று அணியில் வருவார் என ஒரு எதிர்பார்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

குருதாஸ் தாஸ் குப்தா போட்டி இல்லை

மேற்கு வங்கத்தில் வழக்கமாக போட்டியிடும் கட்சியின் மூத்த தலைவரான குருதாஸ் தாஸ் குப்தா இந்தமுறை போட்டியிடவில்லை.ஆந்திரத்தில் கூட்டணி இன்னும் முடிவு செய்யப்படாததால் அந்த மாநில வேட்பாளர்களும் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x