

அயனாவரத்தில் ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 20 பேர் ஆந்திர போலீஸாரால் கடந்த 7-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஆந்திர நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினருக்கு சொந்தமான ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட்டுகள் சென்னையில் 26 இடங்களில் உள்ளன.
சென்னை அயனாவரம் வி.பி.காலனி தெற்கு தெருவிலும் ஒரு ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் சென்றுவிட்டனர். கடை மேலாளர் சுதாகர் மற்றும் 3 ஊழியர்கள் மட்டும் விற்பனை விவரத்தை சரிபார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கடைக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. ஆனால் கடைக்குள் விழுந்த பெட்ரோல் குண்டுகள் வெடிக்க வில்லை. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
கடை மேலாளர் சுதாகர் இந்த சம்பவம் குறித்து அயனாவரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவில் பைக்கில் வந்தவர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தன. அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணை யில் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வாகை வேந்தன், பகுதி செயலாளர் கவுதமன், நிர்வாகிகள் மணிகண்டன், சசிக்குமார் என்பது தெரிந்தது. 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதே போல கடந்த 8-ம் தேதி மயிலாப்பூர் லஸ் கார்னர் சிக்னலில் உள்ள ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.