

நடிகர் சங்கத்தில் பிளவு எதுவும் இல்லை. ஒற்றுமையாக இருக்கிறோம் என நடிகர் சங்கத்தின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகர்சரத்குமார் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திர மாநில வனப் பகுதிக்குள் நுழையும் தமிழக தொழிலாளர்களை சுட்டுக் கொல்வோம் என அந்த மாநில வனத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநில அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீது தவறு இருந்தால் நியாயமான நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். கட்டி வைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏப்ரல் 17-ல் ஆர்ப்பாட்டம்
ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆந்திர அரசு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி, ஏப்ரல் 17-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் தொடங்கும் அனைவருக்கும் முதல்வர் பதவி மீது ஆசை ஏற்படுவது இயல்பு. அதற்கு முயற்சி, உழைப்பு, மக்களின் அங்கீகாரம் யாருக்கு கிடைக்கும் என்பதுதான் முக்கியம். நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டிடம் கட்ட முடியாது.
வழக்கு முடிந்தவுடன் விரைவில் கட்டிடம் கட்டப்படும். நடிகர் சங்கத்தில் பிளவு எதுவும் இல்லை. சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. சங்கத்துக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் என்ன தேவையோ அவற்றை செய்து கொடுக்கிறோம் என்றார் சரத்குமார்.