Published : 10 Apr 2015 10:32 AM
Last Updated : 10 Apr 2015 10:32 AM

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு: வெற்று ஆர்ப்பாட்டங்களால் மக்களை திசை திருப்ப முடியாது - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி பதில்

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 94 சதவீதம் முடிந்துவிட் டது. பொய்ப் பிரச்சாரங்கள், வெற்று ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமிழக மக்களை திசை திருப்ப முடியாது என மு.க.ஸ்டாலினுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வேலூரில் கடந்த 6-ம் தேதி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் 25 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது என்ற தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில், வேலூர் மற்றும் மதுரை - மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் உட்பட 8 திட்டங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் மட்டும் கோரப்பட்டது. அதிமுக அரசு பொறுப்பேற்றதும் இத்திட்டங்களுக்கு ரூ.3,276.62 கோடி நிதி ஒதுக்கி, பணி ஆணைகள் வழங்கியது. மேலும் புதிதாக கடலூர், தஞ்சை, கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் தலா ஒன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 என மொத்தம் 8 பெரிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், ரூ.2,408.34 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன.

வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு, 2011 ஜனவரி, 25-ல் அவசர கோலத்தில் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதல் வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு ரூ.1,295 கோடி நிதி ஒதுக்கி, பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்துக்கு 4 ஆண்டுகளில் ரூ.1,059 கோடி செலவிடப்பட்டு, 94 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.

தற்போது சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக திருப்பத்தூர், வேலூர் மாநகராட்சி வரை உள்ள பயனாளிகள், இம்மாத இறுதிக்குள் பயன் பெறுவர். வேலூர் முதல் வாலாஜா வரை உள்ள பயனாளிகளுக்கு மே இறுதிக்குள்ளும், அரக்கோணம் நகராட்சிக்கு ஜூன் இறுதிக்குள்ளும் குடிநீர் வழங்கப்படும்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், திமுக ஆட்சியில் 75 சதவீதம் முடிந்ததாகவும் தற்போது கிடப்பில் இருப்பதாகவும் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். திமுக ஆட்சியில் 2011 மே வரை,18 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதும், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,462.82 கோடி செலவிடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு, 2013 மே 29-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பொய்ப் பிரச்சாரங்கள், வெற்று ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமிழக மக்களை ஸ்டாலினால் திசை திருப்பிவிட முடியாது.

இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x