

வணிக ரீதியில் இயக்கப்பட்டு வரும் போக்குவரத்து வாகனங்களுக்கு ஆன்லைனில் வரி செலுத்தும் முறையை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 கோடியே 50 லட்சம் சொந்த பயன்பாட்டு வாகனங்களும், 10 லட்சம் வணிக ரீதியிலான சரக்கு, மக்கள் போக்குவரத்து வாகனங் களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்கள் பதிவின்போது 1 முறையும், போக்குவரத்து வாகனங் களுக்கு காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு முறையிலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) வரி செலுத்த வேண்டும்.
இதுவரையில் வரியானது உரிய ஆவணங்களுடன், வரைவோலை மூலமாக ஆர்டிஓ அலுவலகத்தில் நேரடியாக செலுத்தப்பட்டு வந்தது. அதை வரவு வைக்க ஊழியர்கள் சில நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போது இடைத்தரகர் குறுக்கீடும் இருக்கும்.
இவற்றை தவிர்த்து, வெளிப்படை யான நிர்வாகம், வரி செலுத்துவதில் எளிமை ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் ஆன்லைன் வழியாக வரி செலுத்தும் முறையை கடந்த 2012 ஜூன் மாதத்தில் போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தியது. முதலில் புதிய வாகனப் பதிவுக்கு மட்டும் வரி வசூலிக்கப்பட்டது.
பின்னர் 2013 அக்டோபர் முதல் போக்குவரத்து வாகனங்களுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத் தப்பட்டது. தற்போது பள்ளி, கல் லூரிகள், பெரு நிறுவனங்கள், சொகுசு சுற்றுலா நிறுவனங்கள் மட்டும் இம்முறையில் வரி செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் இயக்கப் படும் 10 லட்சம் போக்குவரத்து வாகனங்களில் சுமார் 50 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் வரி பெறப்படுகிறது.
அதனால் பழைய முறையில் வரி செலுத்தும் சேவையும் நடைமுறையில் உள்ளது.
தற்போது அனைத்து போக்குவரத்து வாகனங் களுக்கு ஆன்லைனில் வரி செலுத் தும் முறையை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆன்லைனில் வரி பெறுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அங்கீகரித்துள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
இச்சேவையை பயன்படுத்த www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வாகன உரிமையாளரின் விவரங்கள் மற்றும் வாகனத்தின் விவரங்களை பதிவு செய்து, அவர்களின் பெயரில் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். பின்னர் ஆன்லைன் சேவையில் மேற்கூறிய வங்கிகளில் இன்டர்நெட் பேங்கிங் வசதி பெற்றிருப்போர் வரியை செலுத்தலாம். ஆஃப்லைன் சேவை மூலம் வங்கி கணக்கு அல்லது நெட் பேங்கிங் வசதி இல்லாதோர் செலுத்து ரசீதை தரவிறக்கம் செய்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் மட்டும் வரிப் பணத்தை செலுத்தலாம்.
இதுவரை அனைத்து வாகனங்களும் சேர்த்து 40 லட்சம் பேர் தங்கள் விவரங்களை பதிவு செய்து வரி செலுத்தியுள்ளனர்.
இந்த சேவை தொடங்கப்பட்டு 31 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் ரூ.4 ஆயிரம் கோடி வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த சாதனை எட்டப்படவில்லை.
போக்குவரத்து வாகன உரிமை யாளர்களிடம் ஆன்லைனில் வரி செலுத்தும் முறை குறித்த விழிப் புணர்வு குறைவாக உள்ளது. எனவே விரைவில் ஆன்லைனில் வரி செலுத்தும் முறை கட்டாயமாக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விரைவான சேவை, வெளிப்படை யான நிர்வாகம் ஆகிய நோக்கங் களுக்காக தொழில்நுட்பத்தின் நவீன வளர்ச்சியைப் பயன்படுத்தும் விதத்தில் இத்தகைய புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் பழைய முறையின் மட்டும்தான் பணம் செலுத்துவோம் என கூறாமல், இத்தகைய புதிய முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். திட்டம் வெற்றி பெற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இதுவரை போக்குவரத்து வாகன வரியானது உரிய ஆவணங்களுடன், வரைவோலை மூலமாக ஆர்டிஓ அலுவலகத்தில் நேரடியாக செலுத்தப்பட்டு வந்தது. அதை வரவு வைக்க ஊழியர்கள் சில நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போது இடைத்தரகர் குறுக்கீடும் இருக்கும்.