

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க உதவுமாறு கரூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநில அளவிலான தடகளப் போட்டியில் வென்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியர் ச.ஜெயந்தி சான்றிதழ் மற்றும் பரிசு ஊக்கத்தொகை வழங்கினார்.
கரூர் அருகேயுள்ள பஞ்சமாதேவியைச் சேர்ந்த நந்தகுமாரும்(26) பரிசு பெற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “6-ம் வகுப்பு படிக்கும்போது சைக்கிளில் இருந்து கீழே விழுந்தேன். தொடர்ந்து, எலும்பு புற்று நோய் ஏற்பட்டு, இடது காலை இழந்தேன். எம்சிஏ பட்டதாரியான நான் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
மாநில அளவில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடமும், தேசிய அளவிலான போட்டியில் குண்டு எறிதலில் 4-ம் இடமும், வட்டு எறிதலில் 5-ம் இடமும் பெற்றுள்ளேன். நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கேற்பதே எனது லட்சியம். மதுரையில் உள்ள அரசு விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றுவருகிறேன். போட்டியில் பங்கேற்க அதிக செலவாகும். யாராவது உதவி செய்தால் கண்டிப்பாக போட்டியில் வெற்றி பெறுவேன்” என்றார்.