பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிப்பு வராது: சென்னை தலைமை பொது மேலாளர் தகவல்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிப்பு வராது: சென்னை தலைமை பொது மேலாளர் தகவல்

Published on

பிஎஸ்என்எல் ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பிஎஸ்என்எல் சென்னை வட்டார தலைமை பொது மேலாளர் பாலசுப்ரமணியன் கூறினார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை வளமைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட ஊழியர் சங்கங்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இந்தப் போராட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சேர்ந்த 2.5 லட்சம் ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்படும் இந்தப் போராட்டத்தின் வாயிலாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை அரசு பெருக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அலைக்கற்றையை தன் வசம் வைத்துள்ள மத்திய அரசு அதற்கான தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஊழியர்கள் வலியுறுத்தவுள்ளனர். இந்தப்போராட்டத்தில் தலைமை பொது மேலாளர்கள் மற்றும் வட்ட பொது மேலாளர்கள் போன்ற உயர்நிலை அதிகாரிகள் நீங்கலாக அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கெடுக்கவுள்ளதாக தெரிகிறது.

இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக பிஎஸ்என்எல் எடுக்கவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை வட்ட தலைமை பொது மேலாளர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ‘இந்த வேலைநிறுத்தத்தில் எல்லா ஊழியர்களும் பங்கேற்க போவதில்லை. இதனால் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. இதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மேலும் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in