

தி.நகரில் சிபிஐ அதிகாரிகளைப் போல நடித்து ஒரு கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
சென்னை தி.நகரில் 'ஓல்டு கேரளா ஜுவல்லர்ஸ்' என்ற தங்க நகைக்கடை உள்ளது. கேரளாவில் தங்க நகைகள் செய்யப்பட்டு அவற்றை இங்கு கொண்டுவந்து விற்பனை செய்வது வழக்கம். கேரளாவை சேர்ந்த சிஜோ, ஜோபி ஆகியோர் சுமார் ஒரு கிலோ நகைகளை நேற்று காலையில் சென்னை தி.நகருக்கு கொண்டு வந்தனர். கடையின் அருகே வந்த நிலையில், டிப்-டாப் உடையணிந்த 2 பேர், அவர்களை வழிமறித்து தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். சிஜோ வைத்திருந்த தங்க நகைகள் இருந்த பையை வாங்கி ஒருவர் சோதனை செய்ய, மற்றொருவர் நகைகள் கொண்டு வருவதற்கு அனுமதி வைத்திருக்கிறீர்களா, இது உங்கள் நகை தானா என்று தொடர்ந்து கேள்வி கேட்டிருக்கிறார்.
பின்னர் நகைகள் இருந்த பையை அவர்களிடமே கொடுத்து, பத்திரமாக கொண்டு செல்லுங்கள் என்று அறிவுரை கூறிவிட்டு இருவரும் சென்றுவிட்டனர். ஜோவும், ஜோபியும் கடைக்கு சென்று பையை திறந்து பார்த்தபோது, பேப்பர் சுற்றப்பட்ட ஒரு கல் மட்டும் இருந்தது. நகைகளை காணவில்லை. அதன் பின்னரே சிபிஐ அதிகாரிகள் என்று சோதனை செய்தவர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. உடனே அந்த சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்தும் அந்த 2 மர்ம நபர்களும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் சோதனை நடத்திய இடத்தின் அருகில் 4 கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். உண்மையில் கொள்ளை நடந்ததா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.