Published : 23 Apr 2015 09:01 AM
Last Updated : 23 Apr 2015 09:01 AM

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது ஏன்?- கருணாநிதி கேள்வி

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தள்ளிவைக்கப் பட்டது ஏன் என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்திள்ளார்.

இது குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு பிப்ரவரி யில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ‘தமிழகத்தின் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க அக்டோபரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும். அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், 2014 அக்டோபரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவில்லை.

அதேபோல 2012-ம் ஆண்டு ஒரே நாளில் 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதன்மூலம் ரூ.20,925 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் 36,855 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், அதன்படி தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதா, வேலைவாய்ப்புகள் கிடைத்ததா, என்பதற்கு அரசிடம் இருந்து பதில் இல்லை.

அதன்பிறகு ரூ.5,081 கோடியில் 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத் தானது என்றும், ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க வில்லை என்றும் செய்தி கள் வந்தன. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.26,625 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ரூ.10,660 கோடிக்கு முதலீடுகள் வந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

மேலும், 2015 மே மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்த லுக்கு ஓராண்டே இருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் மாநாட்டால் என்ன பலன் ஏற்படப் போகிறது என கேள்வி எழுப்பியிருந்தேன்.

கர்நாடக முதல்வர், கோவையில் தமிழக தொழிலதிபர்களைச் சந்தித்து தங்களது மாநிலத்தில் முதலீடு செய்யு மாறு அழைப்பு விடுக்கிறார். ஆனால், தமிழக அரசோ மே மாதம் நடக்கவிருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளது. இதற்காக முன்னோட்ட மாநாடு நடத்தி விளம்பரங்கள் செய்த பிறகு மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்பது குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x