

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அறிவிக்கப்பட்ட, 10 முக்கிய சாலைகளை அகலப்படுத்தும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. நடை பாதைகள் ஆக்கிரமிப்பு காரண மாக, சாலைகள் குறுகி, வாகன ஓட்டிகளும், பொது மக்களும் படும் இன்னல்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
சென்னையில் தற்போது 44 லட்சம் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 700 சதவீதம் அள வுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.
நடைபாதை களில் நடக்க முடியாமல், பாதசாரிகள் ஆபத்தான நிலையில் சாலைகளில் நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் நகரின் பிரதான சாலைகளில் பயணம் செய்வதென்பது அபாய கரமானதாகவும், களைப்பை ஏற்படுத்துவதாகவும் மாறிவிட்டது.
நகரில் சில இடங்களில் நேற்று பெய்த லேசான மழைக்கே பல முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, சென்னையின் 10 பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தப்போவதாக, மாநகராட்சி கடந்த ஆண்டு அறிவித்தது. நெல்சன் மாணிக்கம் சாலை, காளியம்மன் கோயில் தெரு (சின்மயா நகர்), சாந்தோம் நெடுஞ்சாலை (காரணீஸ்வரர் பகோடா சாலை முதல் டி.ஜி.எஸ். தினகரன் சாலை வரை), பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம் - ரெட்ஹில்ஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்ட்ராஹன்ஸ் சாலை, சர்தார் பட்டேல் சாலை (அண்ணா சாலை முதல் மத்திய கைலாஷ் வரை), அடையார் எல்.பி.சாலை, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையை (சர்தார் பட்டேல் சாலை முதல் பழைய மகாபலிபுரம் சாலை வரை), என்.எஸ்.கே.சாலை, மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள கோடம்பாக்கம் சாலை ஆகிய சாலைகளை அகலப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அச்சாலைகளின் மையப் பகுதியில் இருந்து இருபுறங்களிலும் 30 மீட்டர் தூரத்துக்கு என்னென்ன ஆக்கிரமிப்புகள் உள்ளன என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணி ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் ஸ்டிராஹன்ஸ் சாலை போன்ற இடங்களில், சாலை களை அகலப்படுத்தும் பணிக்காக கையகப்படுத்தப்பட வேண்டிய அரசு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஆனால், தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவிருந்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகே, தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்க முடியும் என்றனர்.
சென்னையில் தற்போது 44 லட்சம் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் 700 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் அதிகரித்துள்ளன.