

வரலாற்றை சொல்லும் அரிய வகை நாணயங்கள் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் சேலத்தில் கம்மங்கூழ் வியாபாரி தனது தள்ளுவண்டி கடையில் காட்சிபடுத்தியுள்ளார்.
சேலம், கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் கடந்த பல ஆண்டுகளாக கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தள்ளுவண்டியில் கம்மங்கூழ் விற்பனை செய்து வருகிறார்.
அறிவு பசிக்கும் தீனி
ஏழை, எளிய மக்கள் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, சிவாவின் கம்மங்கூழ் கடைக்கு தினமும் படையெடுத்து வருகின்றனர். இவரின் தள்ளு வண்டி கடையில் அரிய வகை நாணயங்களை மினி கண்காட்சி யாக காட்சி படுத்தி வைத்திருப்பதை பலரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். கடந்த 6 ஆண்டுக்கு மேலாக சிவா பழங்கால நாணயங்களை சேகரித்து, காட்சிப்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:
கோவையில் நண்பர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றேன். அங்கு நடந்த நாணய கண்காட்சியை பார்த்தேன். மன்னர் காலத்து நாணயங்களும், வெளிநாட்டு நாணயங்கள் அங்கு இருப்பதை பார்த்து வியந்தேன். ஒவ்வொரு நாணயமும் வரலாற்று உண்மையும், அந்த நாட்டு கலாச்சாரம், பண்பாட்டை பறைசாற்றுவதை அறிந்து, நாணய சேகரிப்பு மீது எனக்கு தனி ஆர்வம் ஏற்பட்டது.
பொருளாதார வளர்ச்சி
சாதாரணமாக கையில் புழங்கும் நாணயங்கள், நம் நாட்டின் அடையாளம் மட்டுமல்ல நமது பொருளாதார வளர்ச்சியை எடுத்து சொல்லும் கருவி. செம்பு நாணயங்கள் இந்தியாவில் அதிகளவு அச்சிட்டு வெளியிடப்பட்டது. காலப்போக்கில் அலுமினியத்தில் அச்சடிக்கப்பட்ட நாணயம், தற்போது, ஸ்டீல் நாணயங்களாக உலா வருகிறது.
சோழர் கால நாணயங்கள் இன்றளவும் அந்த கால வரலாற்றை எடுத்து கூறுவதாக உள்ளது. தற்கால நாணயங்கள் சில ஆண்டுகளில் அச்சு மறைந்து விடும் வகையில் உள்ளன. இதனால், வருங்கால தலைமுறையினர் இந்திய நாணயங்களின் அருமை, பெருமைகளை அறிய முடியாத நிலை உருவாகியுள்ளது.
செல்லாத காசுகள்
செல்லாத காசுகள் என்று ஒதுக்கி வைக்கப்படும் நாணயங்கள் பிற்காலத்தில் அரிய நாணயங்களாகும். இந்தஅரிய நாணயங்கள் மூலம் முன்னோர்கள் வாழ்க்கை முறை, வரலாற்று உண்மைகள், அரசாட்சி, கலை, பண்பாடு, கலாச்சாரம் என பலதரப்பட்ட மனித வாழ்வியல் முறையை அறிந்து கொள்ள இயலும்.
எனவே, செல்லாத காசுகளை பொதுமக்கள் புறம் தள்ளிடும் பழக்கத்தை விட்டு விட்டு, நாணயங்களை சேகரித்து, தம் சந்ததிகளுக்கு இந்திய நாட்டின் பெருமையை எடுத்துணர வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், எனது கடையில் அரிய நாணயங்களை காட்சிப்படுத்தி வைத்துள்ளேன் என்றார்.