Last Updated : 16 Apr, 2015 09:19 AM

 

Published : 16 Apr 2015 09:19 AM
Last Updated : 16 Apr 2015 09:19 AM

போலி மது பாட்டில்கள் பறிமுதல் விவகாரம்: ஆளுங்கட்சியினர் ஆசியுடன் பார்களுக்கு விற்பனை - பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய `நெட்வொர்க்’

திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்வதற்காக விழுப்புரத்தி லிருந்து கொண்டுவரப்பட்ட 5,760 மதுபாட்டில்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பூதாகரமான விஷயங்கள் ஒழிந்திருக்கின்றன. போலி மதுபாட்டில்களை தயாரித்து தமிழகம் முழுக்க டாஸ்மாக் பார்களுக்கு விநியோகம் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதில் மிகப்பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது.

திருநெல்வேலி வி.எம். சத்திரத்தில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது மினி லாரியில் கொண்டுவரப்பட்ட போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டனர். கைதானவர் களில் சிலர் ஆளும் அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு வேண்டிய வர்கள் என்பதால், அவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

விழுப்புரத்தில் இருந்து இந்த மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்ட தாக மதுவிலக்கு போலீஸார் தெரிவிக்கிறார்கள். இந்த பாட்டில் களில் பல்வேறு வகையான பெயர் களுடன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட் டிருந்தன. ஆனால் கலால்துறையின் ஸ்டிக்கர்கள் இல்லை. இந்த பாட்டில்களை திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில் விழாக் களின்போது விற்பனை செய்வ தற்காக கொண்டு வந்ததாக போலீஸார் தரப்பில் மழுப்பலாக தெரிவிக்கப்படுகிறது.

உண்மை நிலவரம் வேறு

இதுகுறித்து டாஸ்மாக் பார் களில் வேலைசெய்யும் சிலரிடம் விசாரித்தபோது, உரிமம் பெற்று நடத்தப்படும் பல்வேறு டாஸ்மாக் பார்களில் இந்த போலி மதுபாட்டில் கள் விற்பனை வெகுஜோராக நடப்பது தெரியவந்துள்ளது. தற் போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ள நபர்களின் உறவினர் களிடம் பேசியபோதும் இது உறுதியானது. இடைத்தரகர்கள் மூலம் விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் இந்த மதுபாட்டில்கள், பார் உரிமையாளர்களின் வீடுகளில் இறக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து பார்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆளுங்கட்சி பிரமுகர்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகரின் நெருங்கிய உறவினரான, ஓய்வு பெற்ற டாஸ்மாக் கண்காணிப்பாளர் ஒருவர் போலி மதுபாட்டில்கள் விற்பனையின் பின்னணியில் இருக்கிறார். பார்களை நடத்த உரிமம் பெற்றுள்ளவர்களிடம் போலியான 180 எம்.எல். பாட்டில்கள் மொத்தமாக கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.40 அவர்களிடமிருந்து பெறப் படுகிறது. அந்த பாட்டில்கள் பார்களில் மது குடிப்போரிடம் தலா ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்.

காலி பாட்டில்கள் பயணம்

மது குடிப்போர் அதிகம் விரும்பும் பிராண்டுகளின் பெயரிலேயே, இவ்வாறு போலியான மது பாட்டில்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார். இவ்வாறு போலி மதுபானங்களை பாட்டில்களில் அடைப்பதற்காக ஒவ்வொரு மதுக் கடைகளில் இருந்தும் காலியான பாட்டில்களை போலி மதுபான ஆலைகளுக்கு அனுப்புவதும் மறைமுகமாக நடைபெறுகிறது.

மூடப்பட்ட மது விலக்குப் பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் போலி மதுபான விற்பனையை தடுக்கவும், கண்காணிக்கவும் வள்ளியூர், ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு போலீஸ் பிரிவுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டன. வள்ளியூர், சங்கரன்கோவில் பகுதிகளில் போலி மதுபான விற்பனை இல்லை என்று அங்கிருந்த மதுவிலக்கு போலீஸ் பிரிவுகள் மூடப்பட்டன.

இந்நிலையில்தான் தற்போது ஆயிரக்கணக்கில் போலி மது பாட்டில்கள் பிடிபட்டுள்ளன. ஆனால், `கோயில் விழாக் களின்போது இவற்றை விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட் டுள்ளன’ என மதுவிலக்கு ஏடிஎஸ்பி ஆர்.ராதிகா செய்தியாளர்களிடம் தெரிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த போலி மதுபான விற்பனை யின் பின்னணியில் உள்ள நெட்வொர்க் குறித்து விசாரித்தால் மேலும் பல விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x