Last Updated : 15 Apr, 2015 08:09 AM

 

Published : 15 Apr 2015 08:09 AM
Last Updated : 15 Apr 2015 08:09 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-வது வாரத்தில் தொடக்கம்: 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 383 இடங்கள் (15 சதவீதம்), அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (மத்திய அரசுக்கு) ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 2,172 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரில் 100 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு உள்ளன. இவை தவிர இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அனுமதியைப் பொறுத்து தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகள், தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளின் மூலமாக 1,000-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்க வாய்ப்புள்ளன. இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் மே முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 2-வது வாரத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை தொடங்க மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகள் கூறுகையில், “மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்தை மே 2-வது வாரத்தில் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்படும்” என்றார்.

புதிய கல்லூரிக்கு அனுமதி கிடைக்குமா?

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கேட்டு கடந்த ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் (எம்சிஐ) தமிழக அரசு விண்ணப்பித்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எம்சிஐ அதிகாரிகள் மருத்துவக் கல்லூரி மற்றும் கல்லூரிக்காக தற்காலிகமாக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரிசெய்யும்படி தெரிவித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து எம்சிஐ அதிகாரிகள் சொன்ன குறைபாடுகளை தமிழக அரசு சரிசெய்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கடந்த வாரம் கல்லூரி மற்றும் மருத்துவமனையை எம்சிஐ அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது எம்சிஐ அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.

மருத்துவக் கல்வி இயக்ககம் இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் கீதா லட்சுமி கூறுகையில், “ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். இந்த கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த கண்டிப்பாக ஒரு மாதத்தில் எம்சிஐ அனுமதி கொடுத்துவிடும். எம்சிஐ அனுமதி கிடைத்துவிட்டால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி களின் எண்ணிக்கை 20 ஆகவும், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 2,655 ஆகவும் அதிகரிக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x