Published : 27 Apr 2015 01:01 PM
Last Updated : 27 Apr 2015 01:01 PM

பவானி சிங்கை சட்ட விரோதமாக நியமித்த ஓ.பி.எஸ். பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

பவானி சிங்கை சட்ட விரோதமாக நியமித்து நீதியை வளைக்க முயன்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இத்தீர்ப்பின் மூலம் நீதிப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக சட்டத்தின் அனைத்து சந்து பொந்துகளிலும் ஜெயலலிதா நுழைந்தார். 2001 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற பின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தியும், சாட்சிகளை மிரட்டியும் இவ்வழக்கிலிருந்து விடுதலையாக முயன்றார்.

அந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் தான் தலையிட்டு இவ்வழக்கின் விசாரணையை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றியது. இதன்மூலம் நீதியின் ஆட்சியை உச்சநீதிமன்றம் முதன்முறையாக காப்பாற்றியது.

அதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து அவர் மூலம் ஜெயலலிதாவைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியையும் இப்போது உச்ச நீதிமன்றம் தவிடுபொடியாக்கியுள்ளது. இதன்மூலம் நீதி மீண்டும் காப்பாற்றப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங் முழுக்க முழுக்க ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.

எனவே, இந்த மேல்முறையீட்டை மீண்டும் விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என்று அனைவரும் கருதினர். உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் அளித்த தீர்ப்பிலும் இதையே தெரிவித்திருந்தார்.

ஆனால், கால தாமதத்தை தவிர்க்கும் நோக்குடன் இவ்வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்று தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது.

அதேநேரத்தில் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் முன்வைத்த வாதங்கள் எதையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை; தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனும், கர்நாடக அரசும் தங்கள் தரப்பு வாதத்தை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமியிடம் நாளைக்குள் எழுத்து மூலம் தாக்கல் செய்ய வேண்டும்.

அவர்கள் தரப்பு வாதங்கள் தீர்ப்பில் எதிரொலிப்பதை நீதிபதி குமாரசாமி உறுதி செய்ய வேண்டும்; ஊழல் மிகப்பெரிய சமூகத் தீமை என ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நீதிபதி குமாரசாமி கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீபக்மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.

எனவே, இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நீதியை நிலைநாட்டும் வகையில் இருக்கும் என நம்பலாம்.

பவானிசிங் நியமிக்கப்பட்ட விதம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை.‘‘பவானிசிங்கின் நியமனம் சட்டவிரோதமானது; வழக்கை திசை திருப்பும் நோக்கம் கொண்டது. இவ்வழக்கில் அவசர அவசரமாக பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பிப்பதற்கு முன்பாக கர்நாடக அரசுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், இந்த வழக்கில் இல்லாத குழப்பமான சூழ்நிலையை தமிழக அரசு அதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பவானிசிங்கை நியமித்தது மிகவும் துரதிருஷ்டவசமானது’’ என நீதிபதிகள் கூறியிருப்பது தமிழக அரசிற்கு கிடைத்த சாட்டையடியாகும்.

பவானி சிங் நியமனத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதற்காக அவரது வழிகாட்டுதலில் நடைபெறும் அரசே அரசு வழக்கறிஞரை நியமித்தது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இதற்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபட்டு ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தது சட்டத்தை வளைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் ஆகும்.

பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அவரை சட்டவிரோதமாக நியமித்து நீதியை வளைக்க முயன்ற ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் உரிமையை இழந்து விட்டார்.

எனவே, ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக பதவி விலக வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x