

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை கண்டித்து மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் கடையடைப்பு மற்றும் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட போட்டிகள் நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை அன்று தடை விதித்தது.
பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவையின் அவசர கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சரியான முறையில் செயல்பட்டு, தமிழர் நலனுக்காக போராடி வெற்றியடைய செய்த முதல்வர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டு விஷயத்திலும் முயற்சி எடுத்து தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து இன்று(சனிக்கிழமை) வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியும், முழு அடைப்பு நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து இன்று மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பாலமேடு, திருமோகூர்,அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதே போல வருடம்தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் மாடுகளை நிறுத்தி அதன் கொம்புகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.