Published : 29 Apr 2015 09:55 AM
Last Updated : 29 Apr 2015 09:55 AM

முத்துக்குமாரசாமி தற்கொலை செய்யவில்லை; விபத்தில் இறந்துள்ளார் - ஜாமீன் மனுவில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தகவல்

வேளாண் உதவி பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆதாரங்கள் இல்லை. அவரது மரணம் விபத்தால் நிகழ்ந்ததற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை வேளாண் உதவி பொறியாளர் முத்துக்குமராசாமி தற்கொலை வழக்கில், தமிழக முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

பொறியாளர் முத்துக்குமாரசாமி மரணம் தொடர்பாக ரயில்வே போலீஸார் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-வது பிரிவில் முதலில் வழக்கு பதிவு செய்தனர். அப்போது முத்துக்குமாரசாமியின் மனைவி ரயில்வே போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தன் கணவர் அலுவலக விஷயங்களை தன்னிடம் தெரிவிப்பதில்லை என கூறியுள்ளார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் என்னை கைது செய்தனர்.

சிபிசிஐடி போலீஸாரிடம் முத்துக்குமாரசாமி மனைவி அளித்த வாக்குமூலத்தில், பிப். 20-ம் தேதி தன் கணவர் இரவில் தூக்கமில்லாமல் தவித்ததாகவும், அவரிடம் கேட்டபோது அலுவலகத்தில் தனக்கு அதிக தொல்லைகள் தருவதாகவும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலம் ரயில்வே போலீஸாரிடம் முத்துக்குமாரசாமி அளித்த வாக்குமூலத்துக்கு முரணாக உள்ளது.

முத்துக்குமாரசாமியின் நண்பர்கள் ராஜகோபால், அசோக்குமார் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில், முத்துக்குமாரசாமி தங்களிடம் வேளாண்மைத் துறையில் 11 ஓட்டுநர்கள் நியமனம் செய்ததற்கு ரூ.11 லட்சம் தர வேண்டும் என தலைமைப் பொறியாளர் செந்தில் கேட்டு துன்புறுத்தி வருவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தான் கூறியதாகவும், அதை கேட்ட ஆட்சியர் கவலைப்பட வேண்டாம், விஷயத்தை தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்சியர் கவலைப்பட வேண்டாம் என கூறியிருந்தும், முத்துக்குமாரசாமி ஏன் தற்கொலை செய்ய வேண்டும்.

இந்த வழக்கை ரயில்வே போலீஸார் பிப். 20 முதல் மார்ச் 7 வரை விசாரித்துள்ளனர். அப்போது முத்துக்குமாரசாமியை மேல் அதிகாரிகள் துன்புறுத்தியதாக யாரும் கூறவில்லை. சிபிசிஐடி போலீஸார்தான் வழக்கின் திசையை மாற்றியுள்ளனர்.

முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூற முடியாது. முத்துக்குமாரசாமியின் மரணம் விபத்தாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நான் ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளேன். ஏப். 5-ம் தேதி முதல் சிறையில் உள்ளேன். மேலும் சிறையில் இருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x