Published : 27 Apr 2015 04:50 PM
Last Updated : 27 Apr 2015 04:50 PM

ரூ.2-க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: 36 வார்டுகளிலும் செயல்படுத்த விருதுநகர் நகராட்சி திட்டம்

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் வகையில் விருதுநகரில் உள்ள 36 வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முன்னோட்டமாக 5-ம் வார்டில் சுத்திகரிக்கப்பட்ட ஒரு குடம் குடிநீர் ரூ.2-க்கு விநியோகிக்கப்படுகிறது.

விருதுநகரில் கடந்த 2 ஆண்டுகளாகப் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதும் அரிதாகி வருகிறது. நகராட்சி மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரும் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை.

டேங்கர் லாரிகள், டிராக்டர்களில் கொண்டு வரப்படும் கிணற்று நீர் ஒரு குடம் ரூ.4-க்கும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் ரூ.12 முதல் ரூ.15 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் குடிநீர் தேவைக்காக தினமும் 2 குடம் தண்ணீரையாவது விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.

இந் நிலையில், விருதுநகர் நகராட்சி சார்பில் வீராச்சாமி தெருவில் (5-ம் வார்டு) ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஒரு குடம் குடிநீர் ரூ.2-க்கு வழங்கப்படுகிறது.

இது குறித்து, இந்த வார்டு கவுன்சிலர் பாட்ஷாஆறுமுகம் கூறியதாவது: பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுத்து அவை 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிரப்பப்படுகிறது. பின்னர் அவை சுத்திகரிப்பு செய்து ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மற்றொரு சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பப்படுகிறது. அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதை பராமரிக்க ஊனமுற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களிடம் இருந்து பெறும் கட்டணம் சுத்திகரிப்பு கருவியில் உள்ள பில்டர்களை இரு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றவும், பராமரிப்பு செலவு களை மேற்கொள்ளவே வசூலிக்கப்படுகிறது என்றார்.

நகர்மன்றத் தலைவர் சாந்தி மாரியப்பன் கூறுகையில், நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னோட்டமாகவே 5-ம் வார்டில் தற்போது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x