

பட்டாபிராம் அன்னம்பேடுவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து, தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, நெமிலிச்சேரி ரயில்வே மேம் பால இறக்கத்தில் சென்ற போது, இளைஞர் ஒருவர் மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை மறித்து, போலீஸ் என கூறி, பணம் கொடுக்காவிட்டால் விடமாட்டேன் என மிரட்டி மணிகண்டனிடம் 350 ரூபாயை பறித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து, பட்டாபிராம் போலீஸாரின் விசாரணையில், மணிகண்டனிடம் பணம் பறித்த அந்த போலி போலீஸ், திரு முல்லைவாயல், மணிகண்டபுரத் தைச் சேர்ந்த அருண்குமார் என்கிற பீட்டர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அருண் குமார் கைது செய்யப்பட்டார். திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள அவர், கார்பெண்டர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், போலீஸாக நடித்து பணம் பறித்தது தெரியவந்துள்ளது.