

விழுப்புரத்தில் விசாரணை கைதி மரணம் தொடர்பாக விழுப்புரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நான்கு காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "விழுப்புரம் ரயில் நிலைய நடைமேடைகளில் புத்தகங்கள் மற்றும் செய்தி தாள்களை விற்பனை செய்து வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சு.ஜெயவேலு, கடந்த 7-ம் தேதி அசாரியா என்பவரின் பொருட்களை அபகரித்தது தொடர்பாக காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் ஜெயவேலு உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜெயவேலுவின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இது குறித்து குற்றவியல் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. இவ்விசாரணை முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்". இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.