Published : 28 Mar 2014 08:35 AM
Last Updated : 28 Mar 2014 08:35 AM

டாஸ்மாக் கடைகளை ஏப். 21-ல் இருந்தே மூடவேண்டும்: தமிழக அரசுக்கு தேர்தல் துறை கடிதம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று கோரி தமிழக அரசுக்கு தேர்தல் துறை கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வியாழக்கிழமை கூறியதாவது: தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், வழக்கமாக வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு மதுக்கடைகள் மூடப்ப டும்.

ஆனால், இப்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, மதுக்கடைகளை ஒரு நாள் முன்னதாகவே மூடினால் தேவையற்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்று கருதினோம். அதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 24-ம் தேதிக்கு 3 நாள் முன்பாக, ஏப்ரல் 21-ம் தேதியே டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் எனக் கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுபோல், வாக்குகளை எண்ணும் மே 16-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

இதற்குமுன்பு 29 ஆக இருந்த தமிழகம் - புதுச்சேரி இடையிலான சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கை, தேர்தலை முன்னிட்டு தற்போது 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைப் போல் நடித்து போலி நபர்கள் சிலர் அப்பாவி பொதுமக்களிடம் பணம் பறிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதனைத் தடுக்கும் பொருட்டு, அனைத்து பறக்கும் படையினருக்கும், பெயர் மற்றும் பதவி விவரம் உள்ளிட்ட தகவல் அடங்கிய அடையாள அட்டை வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியதாக தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x