

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகள் உயிரிழந்தன. ஒரே நாளில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இன்று காலை திருக்கோவிலூர் அருகே உள்ள ஏமப்பூரை சேர்ந்த பார்வதி என்பவருக்கு பிறந்து இரண்டு நாட்களான ஆண்குழந்தை காலை 5.45 மணிக்கும், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சீர்பனந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்கு பிறந்த 3 நாட்களான ஆண் குழந்தை காலை 5.55 மணிக்கும் இறந்தன.
திருக்கோவிலூர் அருகே உள்ள கோவிந்தராஜ நல்லூர் கிராமத்தை சேர்ந்த கலாவுக்கு சிறுமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்தது. எடை குறைவு காரணமாக குழந்தையை முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் . ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை காலை 7.05 மணிக்கு இறந்தது.
அதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆனந்தூர் கிராமத்தை சேர்ந்த இந்திரலேகா என்பவருக்கு 27 நாட்களுக்கு முன் பெண்குழந்தை பிறந்தது. வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்ட குழந்தை உடல் நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 7.39 மணிக்கு இறந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறுகையில், "எந்தவிதமான சிகிச்சை குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது என்பதே எங்களுக்கு தெரியவில்லை., குழந்தையை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. குழந்தை உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறினால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். ஆனால், அதற்கும் அனுமதி மறுக்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்.
மருத்துவமனை ஆர்எம்ஓ மணிவண்ணனிடம் கேட்டதற்கு, "இறந்த குழந்தைகள் குறைந்த எடையில் பிறந்தன. மூச்சு திணறல் காரணமாக குழந்தைகள் இறந்துவிட்டன'' என குறிப்பிட்டார்.