

தனுஷ்கோடி புயலில் அழிந்த ரயிலின் தளவாடங்கள் 51 ஆண்டுகள் கழித்து நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்காக கடற்கரை மணலை தோண்டும் போது கிடைத்தன.
1964-ம் ஆண்டு டிசம்பர்-22 அன்று பாக்ஜலசந்தி கடற்பரப்பை தாக்கிய கோரப்புயலில் இரவோடு இரவாக தனுஷ்கோடி துறைமுகத்தை கடல் இந்திய தேச வரைப்படத்திலிருந்து துடைத் தெறிந்தது. தனுஷ்கோடியில் இருந்த துறைமுகக்கட்டிடம், பாஸ்போர்ட் அலுவலகம், ரயில் நிலையம், மாரியம்மன் கோவில், தேவாலயம், இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாயின. இந்த புயலில் தனுஷ்கோடியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிலத்திலிருந்து கடலுக்குள் சமாதி ஆயினர்.
புயலில் அழிந்த ரயில்
புயலுக்கு முன்னர் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச் சென்ற போர்ட் மெயில் ரயில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யவே, ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் புயல் மிச்சம் வைத்தது வெறும் இன்ஜினின் இரும்பு சக்கரங்களை மட்டும் தான். ரயில் இருந்த 200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.
புயல் தாக்கி 51 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஸ்கோடிக்கு ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து சாலைகள் அமைக்கும் பணிகள் கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. தற்போது முதற்கட்டமாக ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து ஒரு கி.மி தூரம் வரையிலும் நெடுஞ்சாலை அமைக்கும் முடிவடைந்துள்ள நிலையில் வியாழக்கிழமை சாலைப் பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கடற்கரை மணலை பொக்ரைன் இயந்திரத்தில் தோண்டியபோது 51 ஆண்டுகளுக்கு முன்னர் தனுஸ்கோடி புயலில் அழிந்து போன ரயில்வே தண்டவாளம் மற்றும் போட் மெயில் ரயிலின் பாகங்கள் சில கிடைத்துள்ளன.
51 ஆண்டுகள் கழித்து தனுஸ்கோடி புயலில் அழிந்த ரயில் தளவாடங்கள் சென்னை எழும்பூரில் உள்ள ரயில்வே அருங்காட்சியகத்தில் பாதுகாக்க வேண்டும் என ராமேசுவரம் தீவைச் சார்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 28.01.2014 அன்று பாம்பன் ரயில் நிலையத்தில் தனுஸ்கோடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.